20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் சேர்ந்து நடத்துகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டி ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மூன்றாவது ஆட்டம் ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளும் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்தப்போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக 1.86 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் 20 ஓவர் உலக கோப்பை டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போது அனைத்து போட்டிகளுக்கும் டிக்கெட்டுகள் மறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த டிக்கெட்டுகள் StubHub மற்றும் SeatGeek போன்ற தளங்களில் விற்பனை செய்யப்படுகிறன்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், யுஎஸ்ஏ டுடேயின் படி இந்திய அணியின் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட் விலை கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை மட்டும் ரூ.1.86 கோடியை எட்டியுள்ளது.
ஐசிசி சொல்வது என்ன?
ஐசிசியின் கூற்றுப்படி, முதல் கட்ட டிக்கெட் விற்பனையின் போது, டிக்கெட்டுகளின் குறைந்த விலை ரூ.497 ஆகும். அதேசமயம் அதிகபட்ச விலையாக ரூ.33,148 (வரி இல்லாமல்) வைக்கப்பட்டது. இது தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மறுவிற்பனை தளங்களில் வழங்கப்படும் விஐபி டிக்கெட்டுகளின் விலை சுமார் ரூ.33.15 லட்சமாக இருந்தது. இந்த மறுவிற்பனை தளங்களின் கட்டணத்தையும் இதனுடன் சேர்த்தால், விலை சுமார் ரூ.41.44 லட்சத்தை எட்டும்.
அதே நேரத்தில், StubHubல் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான மலிவான டிக்கெட் ரூ. 1.04 லட்சமும், SeatGeek இல் மிகவும் விலையுயர்ந்த டிக்கெட் ரூ.1.86 கோடியும் ஆகும். இந்த தளங்களின் கட்டணங்களும் இதில் அடங்கும். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக 57.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.