இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் (72) இன்று பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதிபர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் ஆசிப் சர்தாரி, பிலாவல் பூட்டோ சர்தாரி, பஞ்சாப் முதல்வர் மர்யம் நவாஸ், சிந்து முதல்வர் முராத் அலி ஷா, பலுசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்தி, பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவியேற்பது இது இரண்டாவது முறை. ஏற்கனவே, ஏப்ரல் 2022 – ஆகஸ்ட் 2023 வரை 16 மாத காலம் அவர் பிரதமராக இருந்துள்ளார்.
இம்முறை, ஷெபாஷ் ஷெரீபுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, முடஹித்தா குவாமி இயக்கம் -பாகிஸ்தான், இஸ்டேகம் இ பாகிஸ்தான் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ, பலுசிஸ்தான் அவாமி கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ஜியா, தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் தேர்தல் பின்னணி: கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 265 இடங்கள். இவற்றில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 133 இடங்கள் தேவை. தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஏ இன்சாப் கட்சி (பிடிஐ) 93 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சி (பிஎம்எல் – என்) 75 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) கட்சி 54 இடங்களிலும், எம்க்யூஎம் (பி) கட்சி 17 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயட்சையாக போட்டியிட்டனர். அவர்கள் அதிக இடங்களில் வென்றிருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பலம் அவர்களிடம் இல்லை. இந்நிலையில் நவாஸ் ஷெரீப் தலைமயிலான பிஎம்எல்- என் கட்சி ஷெபாஷ் ஷெரீப் தலைமையில் புதிய அரசை அமைத்துள்ளது.
நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ் தான் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவிவருகிற நிலையில், அவர் தன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீபை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். இதையடுத்து இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் உமர் அயூப் கான் 92 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக அவர் தேந்தெடுக்கப்பட்டார்.