கடந்த 1952-ம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது முதல் 1977-ம் ஆண்டு 6-வது மக்களவை தேர்தல் நடைபெற்றது வரை ஒரு தொகுதிக்கு சராசரியாக மூன்று முதல் 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாடு முழுவதும் மொத்தமாக 1,874 வேட்பாளர்கள்தான் போட்டியிட்டனர். அப்போது ஒரு தொகுதியில் போட்டியிடும் சராசரி வேட்பாளர்களின் எண்ணிக்கை 4.67-ஆக இருந்தது.
ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 542 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 8039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ரிசர்வ் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் ஒரு தொகுதியில் போட்டியிடும் சராசரி வேட்பாளர்களின் எண்ணிக்கை 14.8 ஆக அதிகரித்துள்ளது.
அனைத்து மாநிலங்களையும் விட தெலங்கானாவில் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 16.1 ஆகும். இங்குள்ள நிஜாமாபாத் தொகுதியில் மட்டும் 185 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அடுத்த நிலையில் தமிழகத்தில் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை கடந்த தேர்தலில் அதிகமாக இருந்தது.
நிஜாமபாத் தொகுதியை அடுத்து கர்நாடகாவின் பெல்காம் தொகுதியில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வேட்பாளர்கள் அதிகம் போட்டியிட்ட 5 தொகுதிகள், தெலங்கானா, கர்நாடகா, மற்றும் தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.