90 வயதில் பரதநாட்டியம் ஆடி அசத்திய வைஜெயந்திமாலா
1949ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'வாழ்க்கை ' படத்தின் மூலம் அறிமுகமானவர் வைஜெயந்திமாலா. 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் 'கண்ணும் கண்ணும் கலந்து…' என்ற பாடலுக்கு பத்மினியுடன் இணைந்து அவர் ஆடிய போட்டி பாடல், காலத்தால் அழியாமல் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது. அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான வைஜெயந்திமாலாவின் படங்கள் அவரது நாட்டியத்திற்காகவே விரும்பி பார்க்கப்பட்டது.
சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், பாலிவுட் சினிமாவிலும் கொடிகட்டிப் பறந்தார். சினிமா தாண்டி அரசியலிலும் குதித்து மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றினார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். சமீபத்தில் அவருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகச்சிறந்த ராம பக்தரான வைஜயந்திமாலா அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் தனது 90 வயதிலும் நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.