அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது, `ஜே.பேபி’. இவர் இயக்குநர் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
நடிகை ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், ‘லொள்ளு சபா’ மாறன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும் விஸ்டாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றன. இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/03/J_baby.jpeg)
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “‘அட்டகத்தி’ படத்தோட படப்பிடிப்பு ‘மங்காத்தா’ படத்தோட ஷூட்டிங் நடக்கும்போதுதான் நடந்துச்சு. ‘பொம்மை நாயகி’ படத்தோட இயக்குநர், ‘ மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி நாங்க பா.இரஞ்சித் பாய்ஸ்’ன்னு சொன்னார். பா.இரஞ்சித்தே வெங்கட் பிரபு பாய்தான்” என்று சிரித்தவர், “நான், பா.இரஞ்சித், இந்தப் படத்தோட இயக்குநர் சுரேஷ் மாரி எல்லோரும் ‘சென்னை 28’ படத்துல ஒரு குடும்பமாக ஒண்ணு சேர்ந்தோம். இவங்களோட வெற்றி எனக்குப் பெருமையாக இருக்கு. நடிகர் அரவிந்த் ஆகாஷ்தான் எனக்கு இயக்குநர் சுரேஷ் மாரியை அறிமுகப்படுத்தினார்.
இப்போ நம்ம எல்லோரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை கொண்டாடுறோம். ஹீரோ, ஹீரோயின் வச்சு படம் பண்ணிட்டு வர்ற காலத்துல ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மாதிரியான படம் நல்லபடியான வரவேற்பைப் பெற்று வருது. இதன் மூலம் திரைப்படத்திற்கு மொழி முக்கியமில்லை. கலைதான் முக்கியம்னு நிரூபணமாகியிருக்கு.
பா.இரஞ்சித் தனி மனுஷனாக நின்னு தனியாக ஓர் உலகத்தை உருவாக்கியிருக்கார். இதுக்கு முதல்ல பெரிய மனசு வேணும். இந்தப் படம் எங்க குடும்பத்துல இருந்து வந்த மற்றொருவரின் படைப்பு” என்றவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் விஜய் நடிப்பில் தான் இயக்கும் ‘The Greatest of All Time’ (The GOAT) படம் குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசினார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/03/tyuioup_.jpg)
“இவ்வளவு சீக்கிரமா அந்தப் படத்தைப் பத்தி பேசுறது சரியாக இருக்காது. இன்னும் நிறைய வேலைகள் இருக்கு. லாஸ் ஏஞ்சல்ஸ்லையும் வேலைகள் நடக்குது. கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் ஆறு நிறுவனங்கள் வேலைப் பார்க்கிறாங்க. டெக்னிக்கலாக ரொம்பவே ஸ்டாராங்கான படமா வெளிவரும். இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று நம்புகிறோம்” என்றார்.
‘J.பேபி’ படத்தின் இயக்குநர் சுரேஷ் மாரி, “இந்த நிகழ்வுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு சார் வந்ததே பெருசு. நான் முதல்ல ‘பட்டியல்’ திரைப்படத்துல இயக்குநர் விஷ்ணுவரதன்கிட்ட உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அதுக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுகிட்ட உதவி இயக்குநராக வேலைக்குச் சேர்ந்தேன். சார்கிட்ட வேலைப் பார்க்கும்போது நல்ல சொகுசான வாழ்க்கை அமைஞ்சது. அவர்கிட்ட அதிகளவுல பெருமை இருக்கும். நான் அவர்கிட்ட அதைத்தான் கத்துக்கிட்டேன்.
‘மங்காத்தா’ படத்தோட ஷூட்டிங்ல அஜித் சாரையே கூல் பண்ணி கூட்டிட்டு வருவார். நான் அவர்கூட ‘பிரியாணி’ படம் வரைக்கும் வேலைப் பார்த்தேன். அதுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் அவரோட கம்பெனில படம் பண்றதுக்கு கமிட்டானேன். அதுக்கு பிறகு அப்ப இருந்த பஞ்சு சார் இந்தப் படத்தை முதல் படமாக பண்ண வேண்டாம்ன்னு சொன்னார். அப்புறம் இந்த மாதிரி படங்கள் ஆரம்பிச்சு தள்ளிப்போச்சு. மீண்டும் பா.இரஞ்சித்கிட்ட ‘கபாலி’ படத்துல உதவி இயக்குநராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்க இரஞ்சிதோட உதவி இயக்குநர்களாக இருந்தவங்க கம்யூனிஸ்ட், ஃபெமினிஸ்ட்னு சொன்னாங்க. எனக்கு ஒரு நிஸ்டும் தெரியாது. அப்போ அவங்க எல்லோரும் ஒரு அரசியல் பேசுனாங்க. அந்தச் சமயத்துல எனக்கு வேறு ஒரு உலகத்துக்குள்ள போன மாதிரி இருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/03/fghjkl__.jpg)
இரஞ்சித்தோட உதவி இயக்குநர்களெல்லாம் நல்லா உழைப்பை செலுத்தக்கூடிய பசங்க. ‘காலா’ படத்தோட சமயத்துல என்னை உட்காரவிடாம கையைப் பிடிச்சு கூட்டிட்டு போனார். இன்னைக்கு வரைக்கும் என் கையைப் பிடிச்சு கூட்டிட்டு வந்திருக்கார். கதாநாயகனாக நடிச்ச பிறகு பலர் வேறு கதாபாத்திரங்கள்ல நடிக்கமாட்டாங்க. ஆனா, ‘அட்டகத்தி’ தினேஷ் இந்தப் படத்துல அப்படியான கதாபாத்திரத்தை ஏற்று நடிச்சிருக்கார். இந்தப் படத்தோட கதைக்கு ஊர்வசி நடிச்சாதான் நல்லா இருக்கும்னு யோசிச்சேன். அவங்களுக்கு விருப்பமில்லாத சூழல் இருந்தால் ராதிகா மேம் இந்தக் கதாபாத்திரத்தைப் பண்ணினால் நன்றாக இருக்கும்னு யோசிச்சேன். அம்மாக்களுக்கான ஒரு பில்டப் பாடலும் இந்தப் படத்துல இருக்கு” என முடித்துக் கொண்டார்.