பெங்களூரு : ”எங்கள் வீட்டு போர்வெல் உட்பட பெங்களூரில் 3,000த்துக்கும் மேற்பட்ட போர்வெல்கள் வற்றிவிட்டன,” என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
கோடைக்கால துவக்கத்திலேயே, பெங்களூரில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண்பது குறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், அந்தந்த துறை அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
குடிநீர் பற்றாக்குறை, விளைச்சல் சேதம், தீவன பற்றாக்குறை உட்பட தற்போதைய பிரச்னைகள், வரும் நாட்களில் ஏற்படக் கூடிய பிரச்னைகளுக்கு, தீர்வு காண தயாராக வேண்டும்.
வறட்சியால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில், விளைச்சல் சேதமடைந்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சூழ்நிலை கடுமையாக இருக்கும். சில இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும்.
அந்தந்த மாவட்டங்களில், கலெக்டர்கள், செயல் நிர்வாக அதிகாரிகள் கோடைக் காலத்தை எதிர்கொள்ள, திட்டம் வகுக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகும் மக்களின் பிரச்னைகளை கவனித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும்.
நிதியுதவி
குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட கூடாது. டேங்கர் மூலமாக, தனியார் போர்வெல்களை பெற்றும், குடிநீர் வினியோகிக்க வேண்டும். குடிநீர் வினியோகிக்க தேவையான நிதியுதவியை, அரசு வழங்கும்.
வறட்சி நிலவுவதால், ‘நரேகா’ திட்டத்தின் பணி நாட்களை, 100 நாட்களில் இருந்து, 150 நாட்களாக அதிகரிக்கும்படி, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நரேகா திட்டத்தின் பணி நாட்களை அதிகரித்தால், மக்கள் பிழைப்பு தேடி வேறு இடத்துக்கு செல்வதை தவிர்க்க முடியும்.
குடிநீர் பிரச்னை இருப்பது தெரிந்தால், அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியம் காண்பிக்கும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வசதியாக, தாலுகா அளவில் கன்ட்ரோல் ரூம் துவக்க வேண்டும்.
நடவடிக்கை
மாவட்ட, தாலுகா அளவிலான அதிகாரிகள் விடுமுறையில் செல்லாமல், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்படாமல், பார்த்துக்கொள்ள வேண்டும். வறட்சியை நிர்வகிக்க, அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கணக்கில், 855 கோடி ரூபாய் உள்ளது. கூடுதலாக, தலா 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
மாநிலத்தில் மின்சார பிரச்னை ஏற்பட கூடாது. புதிய போர்வெல்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். ஜூன் இறுதி வரை, குடிநீர் பிரச்னை ஏற்பட கூடாது. வறட்சி நிர்வகிப்பு பணிகளுக்கு, தேர்தல் விதிகள் முட்டுக்கட்டையாக இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
மாநிலத்தின் பல கிராமங்களில், நீர் நிலைகள் வற்றியதாக தகவல் வந்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் எங்கள் வீட்டின் போர்வெல் உட்பட, பெங்களூரின் 3,000த்துக்கும் மேற்பட்ட போர்வெல்கள் வற்றியுள்ளன.
குடிநீர் பிரச்னையை நாங்கள் தீவிரமாக கருதுகிறோம். அனைத்து அதிகாரிகளுடன் நான் கூட்டம் நடத்தினேன். தண்ணீர் கிடைக்கும் இடங்களை, நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
பெங்களூரு நகரின், அனைத்து டேங்கர் உரிமையாளர்கள், மார்ச் 7க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் டேங்கர்கள் பறிமுதல் செய்யப்படும். நகரில் 3,500 டேங்கர்கள் உள்ளன. இவற்றில் 219 டேங்கர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு குடிநீர் வாரியம், 210 டேங்கர்கள் மூலமாக, குடிநீர் வினியோகிக்கிறது. நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு நகர் உட்பட கர்நாடகா முழுதும் 7,082 கிராமங்கள், 1,193 வார்டுகளில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்