‛‛என்னது… நீயுமா…’’
‛‛என்ன, நீயுமா அட்டென்ட் பண்ண?’’ என்று ஒரு படத்தில் வடிவேலுவின் காமெடி சீன் வரும். அதாவது கிட்டத்தட்ட எல்லோருமே வடிவேலுவுக்கு வந்த போனை அட்டென்ட் செய்திருப்பார்கள். அதேபோன்றதொரு சீன்… மும்பை ஓலா டாக்ஸி டிரைவர் ஒருவரிடம் நடந்திருக்கிறது. ஆனால், இது காமெடி சீன் இல்லை; கொஞ்சம் த்ரில்லிங் சீன்!
ஆம்! ஓலா டாக்ஸி டிரைவர் ஒருவர், தனது பயணிகளிடம், அப்பா இறந்து விட்டதாகவும்… ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தனது பணத்தை சிலர் கொள்ளையடித்து விட்டதாகவும்… தனக்கு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அழுது புரண்டு பணம் பிடுங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த அந்த டிரைவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அனிஷா தீக்ஷித் என்ற ஒரு பெண் யூ-டியூபர் ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட… அதன்பிறகுதான் வடிவேலு காமெடி கணக்காகப் பலரும் – ‛‛என்னது, உங்ககிட்டயுமா? நீங்களுமா காசு கொடுத்தீங்க!’’ என்று ஒவ்வொருவராக கமென்ட் செய்து வருவது தெரிய வந்திருக்கிறது.
அதாவது- தேய்ந்த ரெக்கார்டைப்போல இதே டயலாக்கைச் சொல்லியே பலரிடமும் அவர் பணம் பறித்திருக்கிறார் என்பது லைம்லைட்டுக்கு வந்திருக்கிறது. இதில் சில நடிகைகள், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் என ஏகப்பட்ட பேர் அடக்கம் என்பதுதான் ஹைலைட்!
மும்பையில் பாந்தரா எனும் ஏரியாவில் தனது வீட்டிலிருந்து ஓலா டாக்ஸியை புக் செய்திருக்கிறார் அனிஷா தீக்ஷித் (Anisha Dixit) என்கிற சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர். அப்போது கார் கிளம்பிய பிறகு அந்த டிரைவர், மேற்சொன்ன டயலாக்கை அனிஷாவிடமும் சொல்லியபடி கண்ணைக் கசக்கியிருக்கிறார்.
முதலில் இதை நம்பிய அனிஷாவுக்கு, டிரைவர் தன்னை ரியர்வியூ மிரரில் கவனித்துக் கொண்டே வருவதைப் பார்த்து பிறகு டிரைவரின் மீது சந்தேகம் வந்திருக்கிறது. அதன் பிறகுதான் அவர் டிரைவருக்கும் தனக்கும் நடந்த உரையாடலை மறைமுகமாகப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பயணம் முழுவதுமே தற்கொலை எண்ணத்தைப் பற்றியே பேசி வந்து பாவம் சம்பாதிப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் அவர் முயற்சித்திருக்கிறார்.
அதன் பிறகு அனிஷா தீக்ஷித், ‛‛வண்டியை ஓரமா நிறுத்துங்க; என் ஹஸ்பண்ட் வரட்டும். அவரிடம் பணத்தைக் கொண்டு வரச் சொல்கிறேன்!’’ என்று சொல்லியதும், டிரைவருக்குப் பயம் ஏற்பட்டு வண்டியை நிறுத்தாமல் காரை விரட்டியிருக்கிறார். அதன் பிறகு ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியதும், பணம் கூட வாங்காமல் கிளம்பியிருக்கிறார் டிரைவர். இதன் மூலம் நிச்சயம் இது பணம் பறிக்கும் முயற்சிதான் என்பதை அறிந்த அனிஷா, இது தொடர்பாக ஓலாவுக்குப் புகார் அளித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த டிரைவரைப் பற்றிப் பல புகார்கள் ஓலா நிறுவனத்துக்குப் போயிருக்கிறதாம். ஆனால், அப்போதெல்லாம் ஓலாவிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். 2021-ல் இருந்து இந்த டிரைவர் இதே வேலையைப் பார்த்துப் பலரிடம் பணம் பறித்ததாகவும் தெரிய வந்திருக்கிறது.
அனிஷாவின் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ராதிகா பாங்கியா என்கிற சின்னத்திரை நடிகை ஒருவர், ‛‛அச்சோ, இந்தப் பாவியா… இவருக்கு நான் 8,000 ரூபாய் கொடுத்திருக்கேனே!’’ என்றிருக்கிறார்.
‛‛இவர் குரல் எனக்கு நினைவிருக்கிறது. சத்தமாகவெல்லாம் பேசவில்லை. அழுது கொண்டே என்னிடம், தன் மகனுக்கு ஆப்பரேஷன் இருப்பதாகச் சொன்னார். அதை நம்பி இவரிடம் பணம் கொடுத்தேன்!’’ என்று கமென்ட் செய்திருக்கிறார் இன்னொரு பெண்.
அஞ்சலி சிவராமன் என்கிற இன்னொரு நடிகை, ‛அட, இந்தப் பாவியா! இவரைப் பற்றி நான் ஓலாவில் பலமுறை புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவரிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!’’ என்று சொல்லியிருக்கிறார்.
இப்போது, அந்த டிரைவரைப் பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகவும் ஓலா நிறுவனத்தில் இருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறதாம்.
மீட்டருக்கு மேல எக்ஸ்ட்ரா கேட்டு வாங்குற டிரைவரைப் பார்த்திருக்கோம்; மீட்டர் போட்டுப் பணம் வாங்கிற ஆளை இப்போதான்யா பார்க்குறோம்!