குருகிராம்: குருகிராம் உணவு விடுதியில் மவுத் பிரஷ்னருக்கு பதில் டிரை ஐஸ் சாப்பிட்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்த வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணாவின் குருகிராமில் உள்ளது லஃபோஸ்டா கபே என்ற உணவு விடுதி. இங்கு அங்கித் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை உணவு சாப்பிட சென்றார். சாப்பிட்டபின் அவர்களுக்கு மவுத் பிரஷ்னர் பாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் வாயில் போட்டதில் பயங்கர எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் தண்ணீர் ஊற்றி வாய் கொப்பளித்தனர். அதன்பின் அவர்கள் ரத்த வாத்தி எடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் 5 பேரும்அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மருத்துவரிடம் மவுத் பிரஷ்னர் பாக்கெட்டை அங்கித் குமார் கொடுத்துள்ளார். அதை பார்த்த மருத்துவர், அது மவுத்பிரஷ்னர் அல்ல ‘டிரை ஐஸ்’ என கூறியுள்ளார். இது உறைந்த நிலையில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு ஆகும். இது உருகி திரவ நிலையை அடையாமல், வாயுவாகமாறும். ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை உருகாமல் எடுத்துச் செல்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீரில் கரைந்தால் கார்பானிக் அமிலமாக மாறிவிடும். இதை தெரியாமல் உட்கொண்டால் உடலில் ரத்த காயம் ஏற்பட்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். உயிரிழப்பு கூட நேரலாம்.
இச்சம்பவம் தொடர்பாக உணவு விடுதி ஊழியர் மற்றும் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உணவு விடுதியின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.