கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அபிஜித் கங்கோபாத்யாய கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் பாஜகவில் சேரப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த குமார் மஜும்தார், எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகசட்டப்பேரவை கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அபிஜித் கங்கோபாத்யாய நேற்று பாஜகவில் இணைந்தார்.
முன்னதாக கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரிடம் சுகந்த மஜும்தார் கட்சிக் கொடியை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுகந்த மஜும்தார்கூறும்போது, ‘‘வரும் காலத்தில்,மேற்கு வங்க அரசியலில் திருப்பம்ஏற்படும். மாநில அரசியலை நல்லநிலைக்கு மாற்றுவதற்கு படித்தஇளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க இதுவே சரியான தருணம்” என்றார்.
சுவேந்து அதிகாரி பேசும்போது “அபிஜித் கங்கோபாத்யாய போன்றவர்கள் மேற்கு வங்க அரசியலுக்குதேவைப்படுகின்றனர்” என்றார்.
பாஜகவில் இணைந்த பிறகு அபிஜித் கங்கோபாத்யாய கூறும்போது, “இன்று நான் ஒரு புதிய துறையில் சேர்ந்துள்ளேன். பாஜகவில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், கட்சியின் போர் வீரனாக பணியாற்றுவேன். ஊழல் நிறைந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை மாநிலத்தில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம்” என்றார்.