சென்னை: உலக மகளிர் தினம் (மார்ச் 8) இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தடையில்லா கல்வி, பாலியல் தொந்தரவு இல்லாத தொழில் நிறுவனங்கள், பாரபட்சமில்லாத வாய்ப்புகள் போன்றவையெல்லாம் முழுமையடைந்து ஒவ்வொரு நாளும் மகளிருக்கான தினமாக கொண்டாடப்பட வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூலம் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு, நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் தமிழகத்தில் மகளிருக்கு 33 சதவீத விழுக்காடு இடஒதுக்கீடு, இந்தியாவிலேயே முதல்முறையாக 1973-ல் காவல்துறையில் மகளிர் நியமனம் என்று கருணாநிதி ஆட்சிக் காலங்களில் மகளிரை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பட்டியல் மிக நீளமானவை.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் பெயரால் ‘புதுமைப் பெண்’திட்டத்தையும் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறோம்.இந்த ஆண்டு பிப்.21-ம் நாள், தமிழகத்தில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் ‘தமிழ்நாடு மாநிலமகளிர் கொள்கை 2024’-ஐ வெளி யிட்டோம்.
சமூகத்தின் சரிபாதியான பெண்கள், அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும்வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் பெண்களின் வாழ்வு மேம்பட தொட்டில்குழந்தை திட்டம், அனைத்து மகளிர்காவல் நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டன. தமிழ் கூறும் நல்லுலகில்வாழும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை செயல்படுத்தினார். இந்நாளில் பெண்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இலங்கை தமிழ்ப் பெண்களை வன்கொடுமை, இனப்படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச கூண்டில் நிறுத்துவது தான் பெண்களுக்கு மனிதகுலம் செய்ய வேண்டிய கடமை. உலக மகளிர் தினத்தில் பெண்ணினத்தில் மாண்பு காக்க உறுதி கொள்வோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பாஜகஅரசோ மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி செயல்படுத்தாமல் கண் துடைப்புநாடகத்தை நடத்தி வருகிறது. பெண்கள் சமவாய்ப்பு பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பாலின ஒடுக்குமுறை, சாதி பாகுபாடு, மதவெறி முயற்சிகளை முறியடித்து முன்னேற உறுதி ஏற்கும் நாளாகஉலக மகளிர் தினத்தை அனுசரிப் போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: 21-ம்நூற்றாண்டிலும் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும் போன்ற நோக்கங்களை அடைவதற்கான சூழலை உருவாக்க உறுதி யேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய, மாநில அரசுகள் பெண்கள் முன்னேற்றத்துக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதோடு, வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்க சட்டத்தை கடுமையாக்கி, உச்சக்கட்ட தண்டனையை வழங்க முன்வர வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக வாழ அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரோடு, பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் வழியில் பெண்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர உறுதியேற்போம்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சுயமரியாதையுடன் முன் னேற கரம் கொடுப்பதும், கரம் கோப்பதும் நம் கடமையாகும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: பெண்கள், சவாலை வாய்ப்பாக கருதி தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும். குடும்பத்தினர் பெண் ணுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
வி.கே.சசிகலா: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.தற்போது அரசை வழிநடத்து பவர்கள் பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, உள்ளிட்ட பலரும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.