‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம்தான் கேரளாவிலும் தமிழகத்திலும் தற்போதைய ட்ரெண்டிங்!
2006-ம் ஆண்டு குணா குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார், இயக்குநர் சிதம்பரம். கொடைக்கானலில் நிகழும் கதைகளம் என்ற காரணத்தினால் சில தமிழ் நடிகர்களையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களில் இருவர்தான் ராமசந்திரனும், சித்ர சேனனும். ராமசந்திரனை நாம் பல தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருப்போம். சமீபத்தில் மம்மூட்டியுடன் மலையாளத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்திருந்தார். நடிகர் சித்ர சேனனும் இப்படத்தில் நடித்திருந்தார். மேடை நாடக நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய சித்ர சேனன் நாட்டுப்புற பாடகரும்கூட. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்திற்காக அவர்களைச் சந்தித்துப் பேசினோம்.
பேசத் தொடங்கிய சித்ர சேனன், ” ஷூட்டிங் போன மூணாவது நாளிலேயே இது வழக்கமான ஸ்கிரிப்ட் இல்லைனு எனக்குத் தெரிஞ்சது. இது கண்டிப்பாக ஹிட்டாகும்னு அன்னைக்கே எனக்குத் தெரியும். ஆனா, இப்படியான வெற்றி அடையும்னு நான் எதிர்பார்க்கவேயில்ல. இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தருது. முதல்ல என்ன ஆடிஷன் பண்ணும்போது மரியம் ஜார்ஜ் பண்ணின டீ கடைக்காரர் கதாபாத்திரத்திற்குதான் தேர்வு பண்ணினாங்க. ஷூட்டிங் அன்னைக்கு காலைலதான் என்னுடைய கதாபாத்திரத்தை மாத்தினாங்க. எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்லதான் அன்னைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிற சீன் பத்தி சொல்லுவாங்க. அது எனக்கு ரொம்பவே ஈஸியா இருந்துச்சு. பெருசா எதுவும் கஷ்டத்தைக் கொடுக்காமல் என்னை இயல்பாகவே நடிக்கச் சொன்னாங்க.
இந்தப் படத்தோட படப்பிடிப்புத் தளத்துல மழைனால நான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். எனக்கு கொடுக்கப்பட்ட உடையிலேயும் இலகுவாக தண்ணீர் இறங்கிடும். பயங்கரமான குளிர் இருந்துச்சு. தளத்துல மட்டுமில்லாம வெளியிலேயும் மழை தொடர்ந்து கொட்டுச்சு. எனக்கு கொடுக்கப்பட்ட அறையிலேயும் ஏ.சி இருந்துச்சு. பயங்கராமன குளிர் சூழல்தான். ஏ.சிக்குப் பின் பகுதியிலிருந்து வர்ற வெப்ப காத்துக்கிட்ட போய் உட்கார்ந்துப்பேன். அடிக்கடி டீ குடிப்பேன். இதெல்லாம்தான் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல கஷ்டமாக இருந்துச்சு. அதுவும் ஆர்வத்தோட வேலை பார்க்கும்போது பெரிய கஷ்டமாக தெரியல.” என்றவர், ” என்னுடைய நாடகத்தை ஒரு முறை ‘ஜெய் பீம்’ மணிகண்டன் பார்க்க வந்தாரு. அதுல தான் அவர் எனக்கு அறிமுகமானார். அதுக்குப் பிறகு அவர்கூட ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரைப்படத்துல பணியாற்றினேன். அதுக்கப்புறம் ஹலிதா ஷமீமோட ‘ஏலே’ படத்துல நடிச்சேன்.
அந்தப் படத்தை பார்த்துட்டுதான் என்னை ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்துல ‘மண்டயைன்’ங்கிற கதாபாத்திரத்திற்கு நடிக்கக் கூப்பிட்டாங்க. நான் ஒரு நாட்டுப்புற பாடகரும்கூட. நான் ஒரு நாள் ஷூட்டிங்ல பாடலை முணுமுணுத்தேன். அதைப் பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டு, ‘மண்டையா, பாட்டு பாடுவியா’னு கேட்டு, என்னை பாடச் சொன்னாரு. அதுக்குப் பிறகு நானும் ஒரு மலையாளப் பாட்டை பாடினேன். அதுக்கப்புறம் என்னைப் பத்தி கேட்டார். நானும் என்னுடைய பெயரையும் என் பெயரோட அர்த்தத்தையும் சொன்னேன். அதுக்கு அவர், ” சரி, உங்க ஊர் ரஜினி ஏன் என்னை மாதிரி எளிமையாக நடிக்கமாட்டேங்கிறார்’னு கேட்டார். நான் ‘அவர் உங்களோட தோழன். நீங்களே கேட்டுக்கோங்க’னு நகைச்சுவையாக சொன்னேன்.” என பேசி முடித்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ராமசந்திரன், ” படத்தோட ஸ்கிரிப்ட் கேட்ட சமயத்திலேயே இந்த படம் ஹிட்டாகும்னு தெரிஞ்சது. ஆனா, தமிழிலும், மலையாளத்திலும் இப்படியான வரவேற்பு கிடைச்சது எனக்கே பிரமிப்பாகதான் இருக்கு. இந்த படத்தோட இயக்குநர் சிதம்பரத்தோட சகோதரர் கணபதி என்பவர்தான் இந்த படத்துக்கு நடிகர்களைத் தேர்வு செய்தார். மலையாள நடிகர் திலீப் சாரோட ஒரு படத்தின் மூலமாகதான் கணபதி எனக்கு அறிமுகமானார். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்துக்கு சென்னைல ஆடிஷன் வச்சு திருப்தியடையுற வரைக்கும் நடிகர்களைத் தேர்வு பண்ணாங்க. இந்த படத்துல ‘எந்த நேரமும் போதையை அனுபவிக்கக்கூடிய நபராகத்தான் உங்க கதாபாத்திரம் இருக்கும்’னு இயக்குநர் என்கிட்ட சொன்னார். கொடைக்கானலில் ஒரு கொடிய போதை மேஜிக் காளான்தான். அந்த மேஜிக் காளானை விற்பனை செய்யும் நபராகதான் என்னுடைய கதாபாத்திரத்தை வடிவமைச்சிருந்தாங்க.” என்ற அவர் மம்மூட்டியுடன் மலையாளத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அது குறித்து பேசுகையில், ” ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மூலமாகதான் எனக்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு முன்னாடி வரைக்கு மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியோட படங்களை பார்த்து வியந்திருக்கேன். அங்கு போய் நான் அவரை நேர்ல ஆச்சரியத்தோட பார்த்தேன். மம்மூட்டி சாரும் ரொம்பவே எளிமையானவர். நம்ம இவங்க இப்படி இருப்பாங்கனு ஒரு பிம்பத்தை உருவாக்கி வச்சிருப்போம். அதையெல்லம் அவர் உடைச்சிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு நாள் நாங்க எல்லாம் நாற்காலில உட்கார்ந்திருந்தோம். அவர் அப்போ வந்தார். நாங்க எழுந்து நின்னோம்.
அவர் எங்களை உட்காரச் சொல்லிட்டு எங்களுக்கு பக்கத்துல இருந்த துணிகளை சலவை செய்யுற கல்லுல உட்கார்ந்தாரு. அதுக்கு, ‘நாற்காலிகூட நமக்கு கிடைக்கும். இதுதான் நமக்கு கிடைக்காது’னு சொன்னார். அதன் பிறகு வேட்டியை கட்டுற மாதிரியான காட்சி . நான் உடனே வேகமாக எடுத்துக் கட்டுனேன். அதுக்கு மம்மூட்டி சார் ,’ரஜினிகாந்தை பார்த்து தமிழ்நாட்டுல எல்லோரும் வேகமாக இருக்காங்க’னு சொன்னார். அது மாதிரி ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாடுக்கு எங்களை கூட்டிட்டு போகிற வண்டி வர்றதுக்கு தாமதம் ஆகிடுச்சு. உடனடியாக அவருடைய கார்ல எங்களை கூட்டிட்டு போனார்.” எனப் பேசினார். இவர்களின் வீடியோ நேர்காணலைக் காண…