சர்வதேச மகளிர் தினம்: டூடுல் போட்டு கொண்டாடிய கூகுள்

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலை சோஃபி டியாவோ என்ற டூடுல் கலைஞர் உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருத்தியலாக மகளிர்க்காக முதலீடு செய்வோம்: வளர்ச்சியை வேகப்படுத்துவோம் (‘Invest in Women: Accelerate Progress) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு டூடுலில், ஒரு பெண் குழந்தை, ஒரு நடுத்தர வயது பெண் மற்றும் ஒரு வயதான பெண்மணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த டூடுல் ஒரு பெண் சிறு வயது முதல் வயது முதிர்வு வரை உள்ள காலகட்டதை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் அதன் விளக்கத்தில் மகளிர் தின வரலாறு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற ‘சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. “அனைத்துத் தேசிய இனங்களையும் சார்ந்த சோஷலிஸ்ட் பெண்கள் ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் (Women’s Day) கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சினை அனைத்துடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டும்” என்கிற அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் சர்வதேச மகளிர் நாள் உருவாகக் காரணமாக அமைந்தது. அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்து, மகளிர் நாள் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின் என்பது குறிப்பிடத்தக்கது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.