கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் செவ்வாய்க்கிழமை போலீஸாருடன் நடந்த மோதலில் 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இவர்கள் மீது ரூ.36 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நீலோத்பால் கூறுகையில், “மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கில் தெலங்கானாவில் இருந்து சில நக்ஸலைட்டுகள் பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்துள்ளதாக திங்கள்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கட்சிரோலியின் சிறப்பு பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேடுதலின் போது சி-60 பிரிவு செவ்வாய்க்கிழமை காலையில், ரேப்னபள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் நக்ஸலைட்டுகள் சிலர், போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதற்கு பதிலடியாக போலீஸார் பதிலடி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடு நின்ற பின்னர், அந்த பகுதியில் போலீஸார் தேடுதல் நடத்தினர். அப்போது, 4 நக்ஸலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களின் தலைக்கு ரூ.36 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து ஏகே.47 துப்பாக்கி, கார்பைன், 2 நாட்டுத் துப்பாக்கிகள், நக்ஸல் இலக்கியங்கள் மற்றும் பல பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள், நக்ஸல் அமைப்புகளுக்கு செயலாளர்களாக செயல்பட்ட வர்கீஸ், மக்து மறஅறும் குர்சங் ராஜு மற்றும் குதிமேத்தா வெங்கடேஷ் ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது” என தெரித்தார்.