'நாட்டு மக்கள் மாற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்' – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி,

18-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன. மேலும் ஆந்திரா, ஒடிஷா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இதுவரை 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கூட்டத்தின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது;-

“நாட்டு மக்கள் மாற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2004 தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தை எழுப்பி தோல்வியை தழுவியது. அதே போன்ற நிலை தற்போதைய பா.ஜ.க. அரசுக்கும் ஏற்படும்.

நமது தேர்தல் அறிக்கை மற்றும் நமது உறுதிமொழிகளை நாட்டு மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. கிராமங்கள், நகரங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வீடுதோறும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதோ, அவை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அளிப்பதற்கு முன், அந்த வாக்குறுதிகளை நம்மால் நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகவே 1926 முதல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புக்கான ஆவணமாக கருதப்படுகிறது. ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரைகள் வெறும் அரசியல் யாத்திரைகளாக அல்லாமல், மிகப்பெரிய மக்கள் தொடர்பு இயக்கமாக அரசியல் வரலாற்றில் குறிப்பிடப்படும்.

நமது காலத்தில் இவ்வளவு பெரிய யாத்திரைகளை யாரும் மேற்கொண்டதில்லை. ராகுல் காந்தி மேற்கொண்ட இரண்டு யாத்திரைகளால் மக்களின் பிரச்சினைகளை தேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.”

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.