காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ நியாய யாத்திரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நிறைவுபெற்றது. இந்தியா கூட்டணியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி, `பா.ஜ.க-வின் வெற்றிக்குக் காரணம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்தான். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்றவற்றில்தான் மோடியின் சக்தி (அதிகாரம், வலிமை) இருக்கிறது. அந்த சக்தியைத்தான் நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம்” என்று கூறிருந்தார்.
ஆனால், நேற்று முன்தினம் தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தியின் பேச்சை விமர்சித்த பிரதமர் மோடி, “ஒவ்வொரு தாயும், மகளும் சக்தியின் வடிவம். சக்தி வடிவில் அவர்களை நான் வணங்குகிறேன். ஆனால், இந்தியா கூட்டணி சக்தியை அழிக்க நினைக்கிறது” என்றார்.
பின்னர், அடுத்த சில மணிநேரங்களில் இதற்கு எதிர்வினையாற்றிய ராகுல் காந்தி, “நான் உண்மையைப் பேசுகிறேன் என மோடிக்குத் தெரியும். அதனால்தான், நான் கூறியதைத் திரித்துக் கூறுகிறார்” என விளக்கினார். இருப்பினும், நேற்று சேலம் மாநாட்டில் மோடி, “காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி, இந்த சக்தியின் வடிவத்தை `சனாதனத்தை அழித்துவிடுவோம்’ என்று கூறிவருகிறது. அவர்கள் வேண்டுமென்றே இந்து மதத்தை அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேறு எந்த மதத்துக்கு எதிராகவும் அவர்கள் பேசுவதே இல்லை” என்றார்.
இந்த நிலையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மதத்தின் பெயரால் எதிர்க்கக் கூடாது என ராகுல் காந்தியை விமர்சித்திருக்கிறார். தனியார் ஊடகமான நியூஸ் 18 சேனல் நடத்திய ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஸ்மிருதி இரானி, “அமேதியில் தோல்வி கண்டு பயப்படும் ஒருவரால் தேசத்தின் இலக்கை தீர்மானிக்க முடியாது.
எனது இந்து மதத்துக்கு எதிராக அவர் பேசுவது இதுவொன்றும் முதன்முறையல்ல. உண்மையில் அவர் மதச்சார்பற்றவராக இருந்தால் மதத்தின் பெயரால் எதிர்க்கக் கூடாது. பிரச்னைகளின் அடிப்படையில் போராட வேண்டும். தேர்தல் அரசியலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானது. ஆனால், ஒருவரின் தலைமைப் பண்பு என்பது நம்பிக்கைகள், கொள்கைகளில் உறுதியாக நிற்பதன் மூலமே நிரூபிக்கப்படுகிறது” என்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் கோட்டையான அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி, இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், கடந்த முறை அமேதி தொகுதியில் தோற்றாலும், கேரளாவில் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குள் சென்ற ராகுல் காந்தி, இந்த முறை வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார்.