வேலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் முருகன் என்பவருக்குப் பதிலாக மகேஷ் ஆனந்த் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். தேர்தல் பொறுப்பாளராக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மானை நியமித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
வேட்பாளர் மாற்றத்துக்கான காரணம் குறித்து நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, ‘‘முன்னதாக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் முருகனுக்கு உடல் நிலை சரியில்லை. அதே சமயம், தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி கதிர் ஆனந்த், பா.ஜ.க-வில் பெரும் பணக்காரர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் மீண்டும் மோதத் தயாராகியிருப்பதால், அவர்களுக்கே கடும் போட்டி ஏற்படுத்தும் விதமாக புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அண்ணன் சீமான் முடிவு செய்தார்.
அதற்காகத்தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த மகேஷ் ஆனந்தை களமிறக்கிவிட்டிருக்கிறார். பி.இ பட்டதாரியான மகேஷ் ஆனந்த் ‘ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ துறையில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், வேலூர் தொகுதியில் பெரும்பான்மை வாக்குவங்கியாக இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் மகேஷ் ஆனந்த். வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடக்கவிருக்கிறது. அதன் பிறகு, மகேஷ் ஆனந்த் வேலூர் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.
முதலில், ‘கட்சி உறுப்பினர்களை வீடுதேடிச் சென்று அவர்கள் குடும்ப வாக்குகளை அறுவடைச் செய்வோம். பிரசார பகுதியில் குறைந்தது 100 தொண்டர்கள் வேட்பாளருடன் இருக்க வேண்டும். பொதுக்கூட்டம் என்றால் சட்டமன்றத் தொகுதிக்கு குறைந்தது 50 பேர் என 300 பேர் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும்’ ஆகிய இரண்டு கட்டளைகளையும் கட்டாயமாக கடைபிடிக்க அண்ணன் உத்தரவிட்டிருக்கிறார்’’ என்கின்றனர். தி.மு.க வேட்பாளர், அ.தி.மு.க-வில் அறிவிக்கப்படவிருக்கும் வேட்பாளர் ஆகியோரும் வன்னியர் சமூகத்தினர்தான். அதேபோல, பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க இருப்பதாலும் வன்னியர் சமூக வாக்குகள் ஏ.சி.சண்முகத்துக்கும் குறிப்பிட்ட அளவு பதிவாகும். ஆக, நான்குப் பக்கமும் வன்னியர் சமூக வாக்குகள் சிதறப் போகிறது என்பதே களநிலவரமாக இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY