முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொள்ளும் ஜெ.ஜெயலட்சுமி என்பவர், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிதாக தொடங்கிய தனது கட்சியின் பெயரை நேற்று பதிவு செய்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள். மக்களவைத் தேர்தலையொட்டி புதிதாக ‘எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கிறேன். அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். எனது கட்சிக்கு இரட்டை இலையுடன் கூடிய இரட்டை ரோஜா சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கேட்டிருக்கிறேன்.
மேலும், இரட்டை இலை சின்னத்தை பெறவும் முயற்சித்து வருகிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் எனது கட்சி சார்பில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளோம். நான் தேனி தொகுதியில் போட்டியிடுகிறேன். இரட்டை இலை சின்னத்துக்காகவும், ஜெயலலிதாவின் மகள் என்ற முறையில் என் அம்மாவின் சொத்துகளுக்காகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.