திருவனந்தபுரம்: கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை பாஜக இம்முறை பெறாது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் தொகுதியின் எம்பியான சசி தரூர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளாவின் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநிலத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “நாட்டின் ஜனநாயகத்தை கடத்திச் செல்ல பாஜக முயன்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். நாம் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும்.
கேரளாவின் 20 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை பாஜக இம்முறை பெறாது. இது அவர்களுக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சி கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் மட்டுமல்லாது, இந்தி பேசும் மாநிலங்களிலும் வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சசி தரூரை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை, இண்டியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம், “ஜெய்ப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஷர்மாவை அவரது வலதுசாரி நிலைப்பாடு காரணமாக கட்சி திரும்பப் பெற்றுள்ளது. காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கும் ஜெய்ப்பூர் டயலாக்ஸ் அமைப்போடு அவர் தொடர்பில் இருந்ததால் காங்கிரஸ் அவரை திரும்பப் பெற்றது.
அதேபோல், சசி தரூரையும் காங்கிரஸ் திரும்பப் பெற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை சசி தரூர் கொண்டிருக்கிறார். முஸ்லிம் லீக் நடத்திய பாலஸ்தீன ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றுப் பேசிய சசி தரூர், ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என பேசி உள்ளார். சுனில் ஷர்மாவை நீக்கியதைப் போல் ஏன் சசி தரூரை காங்கிரஸ் கட்சி நீக்கக் கூடாது” என கேள்வி எழுப்பி உள்ளார்.