பரவலாக டீசல் என்ஜின்களை தவிர்க்க துவங்கியுள்ள ஆட்டோமொபைல் உலகில் முதன்முறையாக வால்வோ கார் தனது மாடல்களில் டீசல் என்ஜின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது.
ஸ்வீடனில் உள்ள டோர்ஸ்லாண்டா ஆலையில் இறுதியாக தயாரிக்கப்பட்டுள்ள டீசல் என்ஜின் பெற்ற XC90 எஸ்யூவி உற்பத்தி முடிவுக்கு வந்தது. 2030 ஆம் ஆண்டுக்குள் வால்வோ தனது கார்களை மின்சார வாகனங்களாக மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ XC90 எஸ்யூவி மாடல் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் சமீபத்தில் EX90 என எலக்ட்ரிக் மாடலாக மாறியது. டீசல் என்ஜின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தினாலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் மாடல்களை தொடர்ந்து தயாரிக்க உள்ளது.
மேலும் டீசல் எஞ்சினுக்கு தொடர்ந்து உதிரிபாகங்கள் வழங்குவதனையும், சேவை தொடர்பான அனைத்தையும் சர்வதேச அளவில் வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வால்வோ கார் நிர்வாகி எரிக் செவரின்சன் கூறுகையில், டீசலுக்கு மாற்றாக புதுமையான தீர்வுகளை வழங்குவதில் பிராண்டின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்த நிலையில், புதை படிவ எரிபொருளில் இயங்கும் வாகனங்களை படிப்படியாக நிறுத்துவதில் வால்வோவின் முன்னோடியாக உள்ள நிலைப்பாட்டை குறிப்பிட்டார். மற்ற வாகன உற்பத்தியாளர்கள் ICE நிறுத்தம் தொடர்பாக தெளிவான காலக்கெடுவை அமைப்பதில் தயக்கம் காட்டினாலும், பசுமை வாகன விருப்பங்களைத் தேடுவதில் வால்வோ உறுதியாக நிற்கிறது என தெரிவித்துள்ளார்.