சென்னை: அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவங்களில் கையெழுத்திட பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘தேர்தல் ஆணைய தரவுகளின்படி, நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால், வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோருவதற்கான ஏ, பி படிவத்தில் கையெழுத்திட எனக்கு அதிகாரம் தரவேண்டும்’ என்று கோரியிருந்தார். அவரது ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி, ‘பழனிசாமிக்கு இரட்டை இலை ஒதுக்க கூடாது’ என்று ஆணையத்தில் மனு அளித்தார்.
‘பழனிசாமி தரப்புக்கோ, வேறு நபர்களுக்கோ இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது’ என்று திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவரும் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், ‘இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி கையெழுத்திடும் அதிகாரத்தை கட்சியின் அவைத் தலைவருக்கு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அதே கோரிக்கையுடன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு அளித்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
எங்களிடம் உள்ள ஆவணங்களில் பழனிசாமிதான் அதிமுக பொதுச் செயலாளர் என்று உள்ளது. எனவே, அதிமுக சார்பில் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவும், அவர்களை அங்கீகரிக்கவும், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவங்களில் கையெழுத்திடவும் பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு தடை இல்லை.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை பயன்படுத்த தடை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையே, நேற்று வேட்புமனு தாக்கல் முடிவதால், கோரிக்கை காலாவதி ஆவதாக நீதிமன்றம் கூற, மனுதாரர்கள் வழக்கை திரும்ப பெற்றனர். இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.