தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், “தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
வாய்ப்பு இருந்தால் அடுத்து வரும் தோதலில் போட்டியிடுவேன். மேலும் டி.டி.வி.தினகரன் பல்வேறு உதவிகளை இங்கு செய்துள்ளவர், அனைவருக்கும் பரிச்சயமானவர். நானும் அவரும் வேறு வேறு இல்லை.
ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ், தேனியில் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். `ஓ.பி.எஸ்., தாத்தா…’ என குழந்தைகள்கூட அன்போடு அழைக்கும் முகத்திற்குச் சொந்தக்காரர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பழுத்த அரசியல் அனுபவம் பெற்றவர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காவே, ராமநாதபுரத்தில் அவர் பெயரிலேயே பல வேட்பாளர்களை போட்டியிட மனு செய்ய வைத்துள்ளனர். அந்த குழப்பத்திற்கு வேட்பு மனு பரிசீலனையிலேயே உண்மை நிலை தெரிந்துவிடும். எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் கட்சியை அபகரித்துக் கொண்டார். மேலும், நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அவரால்தான் பறிபோனது. போடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால், நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது” என்றார்.