ஓசூர்: ஓசூர் பாகலூர் அருகே கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்க 4 கி.மீ தூரம் நடந்து செல்லும் நிலையுள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வாகன வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள பிஎஸ் திம்ம சந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பி.தட்டனபள்ளி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமம் கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. மேலும், இக்கிராமத்தில் தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
பேருந்து வசதி இல்லை: மேலும், இக்கிராம மக்கள் தங்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சிப் பிரச்சினைகளுக்கு பிஎஸ் திம்ம சந்திரம் ஊராட்சி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், கர்நாடக மாநிலம் தொட்டி கிராமத்தின் வழியாக சுமார் 4 கிமீ தூரம் செல்ல வேண்டும். அதுவும் பேருந்து வசதி இல்லாததால், கால்நடையாக அல்லது இருசக்கர வாகனத்தில் மட்டுமே சென்று வர முடியும்.
அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க பிஎஸ் திம்ம சந்திரம் கிராமத்துக்கு 4 கிமீ தூரம் நடந்தே சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இதனால், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் சிரமத்துக்கு உள்ளாவதோடு, வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. அதேநேரம் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் பி.தட்டனபள்ளி கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்கப் படுகிறது.
சிரமத்தை தவிர்க்க வேண்டும்: இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் மூலம் வாகன வசதி செய்து தர வேண்டும் அல்லது தங்கள் கிராமத்தில் வாக்குச் சாவடி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிராம மக்கள் சிலர் கூறியதாவது: எங்கள் கிராமம் மாநில எல்லையில் உள்ளதால் அடிப்படை வசதிகள் தொடர்ந்து கேள்விக் குறியாகி வருகிறது. எங்கள் கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்க திம்மசந்திரம் வாக்குச் சாவடிக்கு 4 கிமீ தூரம் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை: தேர்தல் நாளன்று அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் நாங்கள் செல்வதால், சுதந்திரமாக வாக்களிக்க முடிய வில்லை.
எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கிராமத்தில் வாக்குச் சாவடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தேர்தல் ஆணையம் மூலம் எங்கள் கிராம மக்கள் வாக்களிக்க வாகன வசதிகள் ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்த்தால், 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாக்காளர்களின் நலன் கருதி வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை: தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: தமிழக, கர்நாடக மாநிலங்கள் இணைந்திருக்கும் பகுதியில் பி.தட்டனபள்ளி கிராமம் உள்ளது. இக்கிராமத்தை எப்படி பிரித்தார்கள் எனத் தெரியவில்லை. இக்கிராமம் மட்டும் தனியாக உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் அக்கிராம மக்கள் வாக்களிக்க வசதியாக வாகன வசதி ஏற்பாடு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலருக்குப் பரிந்துரை செய்கிறோம்.
அதேபோல், அக்கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என்றால் 1,500 வாக்குகள் இருக்க வேண்டும். ஆனால், அங்கு 430 வாக்காளர்கள் உள்ளனர். இருந்தாலும் வாக்காளர்கள் நலன் கருதி அப்பகுதியில் வாக்குச்சாவடி அமைக்க முயற்சி செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.