வாலாஜா: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாஜகவும், திமுகவும் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வர வில்லை என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ளும். இந்த தேர்தலில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்தவித வளர்ச்சியும் கொண்டு வராத, பாஜக ஆட்சியை மக்கள் வீழ்த்த வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியினால் நாட்டில் ஏழை, பணக்காரர்கள் விகிதம் தான் அதிகரித்துள்ளது.
மக்கள் வளர்ச்சிக்கும், ஒருங்கிணைப்புக்கும் எந்த ஒரு திட்டங்களும், கொள்கைகளும் செயல்படுத்தவில்லை. அதேபோல, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் திமுகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புதிய திட்டங்கள், கொள்கைகள் கொண்டு வரவில்லை. இந்த தேர்தல் ஏழைகளுக்கான தேர்தலாக இல்லை. உதாரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தேர்தலில் போட்டியிடவில்லையா என்று கேட்டபோது, தன்னிடம் அந்த அளவுக்கு பண வசதி இல்லை என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த தேர்தல் யாருக்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் செலவுக்காக 95 லட்சம் ரூபாயும், அந்த வேட்பாளர் ஆதரிக்கும் கட்சி சார்பில் 25 லட்சம் ரூபாய் என தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. ஆனால், நாட்டில் 24 கோடி மக்கள் இன்னமும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 270 ரூபாய் சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இவர்களில், பெரும்பாலானவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே உள்ளனர். 8 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை, 12 கோடி மக்களுக்கு வீடு இல்லாமல் உள்ளனர். எனவே, இந்த தேர்தல் ஆரோக்கியமான தேர்தலாக தெரியவில்லை. இந்த தேர்தல் அரசியல் கட்சி மற்றும் அதை சார்ந்தவர்களுக்கான தேர்தலாக மட்டுமே உள்ளது’’ என்றார்.