ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று விளையாடி 83 ரன்கள் எடுக்க, அவருக்கு பக்கபலமாக கிரீன் 33 ரன்களும், மேக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்தனர். இறுதிகட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 சிக்சர்கள் விளாசி 8 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கேகேஆர் அணி பேட்டிங் இறங்கும் வரை இதுவலுவான ஸ்கோர் போலவே தெரிந்தது.
ஆனால் அந்த அணியில் சுனில் நரைன், பிலிப் சால்ட் ஓப்பனிங் இறங்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியதும் கதையே வேறாக இருந்தது. அவர்களின் அதிரடி ஆட்டம் ஆர்சிபி அணியை கலங்கடித்தது. பிலிப் சால்ட் 30, நரைன் 47, வெங்கடேஷ் 50, ஸ்ரேயாஸ் 39 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அதிரடியாக விளையாடி பெங்களுரு அணியை கலங்கடித்தனர். சேஸிங் தொடங்கியதுமே கேகேஆர் அணி பக்கம் சென்ற போட்டி, கடைசி வரை எந்த இடத்திலும் பெங்களுக்கு அணி மீண்டு வருவதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. அடி எல்லாம் தர்ம அடியாக இருந்ததால் பெங்களுரு அணி 2வது தோல்வியை சந்தித்துள்ளது.
இப்போட்டியில் தோல்விக்கு மிக முக்கிய காரணம் ஆர்சிபி அணியின் பவுலிங் தான். ஐபிஎல் ஏலம் முடிந்தவுடனேயே பலரும் கூறியது ஆர்சிபி அணிக்கு ஒழுங்கான பவுலிங் காம்பினேஷன் இல்லை என சுட்டிக் காட்டினர். அது இதுவரை அந்த அணி விளையாடி மூன்று போட்டிகளிலும் பட்டவர்த்தனமாக தெரிந்தது. சரியான பவுலிங் இல்லாததால் ஆர்சிபி அணி இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டியதாக இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் பவுலிங் சரியில்லாமலேயே தோற்ற ஆர்சிபி அணி, கொல்க்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அதே காரணத்துக்காக தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி சேஸிங்கில் வெற்றி பெற்றது. இது குறித்து ஆர்சிபி அணியும் அறிந்திருப்பதால் அடுத்த போட்டியில் சரியான பவுலிங் காம்பினேஷனை உருவாக்க முயற்சிக்கும்.
ஆர்சிபி அணியை தோற்கடித்ததில் மிகுந்த உற்சாகத்தில் இருந்தது கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தான். அவர் போட்டிக்கு முன்பாக அளித்த பேட்டியில், ஐபிஎல் தொடரில் ஒரு அணியை மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பது ஆர்சிபி அணியை மட்டுமே என தெரிவித்தார். ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாவிட்டாலும், அந்த அணிக்கான பிராண்டு வேல்யூ என்பது அதிகம், அந்த அணியில் இருப்பதுபோல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் மற்ற அணிகளில் இருந்ததில்லை எனவும் கவுதம் காம்பீர் தெரிவித்திருந்தார். கவுதம் கம்பீர் கூறியதுபோலவே ஆர்சிபி அணியை, கொல்கத்தா அணி வெறிகொண்டு விளையாடி தோற்கடித்திருக்கிறது.