`காக்க காக்க’, `வேட்டையாடு விளையாடு’, `பொல்லாதவன்’, `பைரவா’, `வடசென்னை’, `பிகில்’ உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவிற்குத் திரை பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்வீட் மூலம் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அப்பதிவில், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” என்று பதிவிட்டிருக்கிறார்.
“டேனியல் பாலாஜி எங்களது ராடான் `சித்தி’ தொடரில் அறிமுகமான ஒரு திறமை மிக்க நடிகர். நெகட்டிவ் ரோலில் சித்தி தொடரில் நடித்த போதிலும் பெரும் புகழ் அவருக்குக் கிடைத்தது. அருமையான மனிதர் அவர். அவரது மறைவு என்னைத் துயரில் ஆழ்த்துகிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று டேனியல் பாலாஜியுடன் `சித்தி’ தொடரில் இணைந்து நடித்த ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நடிகரும், டேனியல் பாலாஜியின் அண்ணன் நடிகர் முரளியின் மகனுமான அதர்வா, “நேரமும், மக்களும் முக்கியம் என்பதை உணர்ந்த நாள்களில் இதுவும் ஒன்று. நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இன்னும் அதிக நேரம் செலவிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ரெஸ்ட் இன் பீஸ் பாலாஜி சித்தப்பா” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகர் சந்தீப் கிஷன், தான் உதவி இயக்குநராக இருந்தபோது தன்னிடம் மிகக் கனிவாக நடந்துகொண்ட ஒரே மனிதர் அவர்தான் என்றும், நடிப்பில் தனக்கு ஆர்வம் இருப்பது தெரிந்ததும் தனக்குத் தெரிந்த இடங்களில் எல்லாம் தன்னை ஆடிஷனுக்கு அனுப்பினார் என்றும் பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.