Mumbai Indians Captain Hardik Pandya News: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் இதுவரை தோல்வியடையாத நிலையில், டெல்லி, மும்பை அணிகள் இதுவரை இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. லக்னோ அணி தனது முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது.
மேலும், நடப்பு சீசனில் (IPL 2024) நடந்த முதல் 9 லீக் போட்டிகளிலும் ஹோம் டீம்களே வெற்றி பெற்று வந்த நிலையில், நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை வீழ்த்தி அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அதற்கு முந்தைய போட்டியில், மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. அதேபோட்டியில் மும்பை அணி 246 ரன்களை அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த அணி என்ற பெருமையையும் பெற்றது.
ஹர்திக் பாண்டியாவுக்கு கடும் எதிர்ப்பு
இப்படி நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே பரபரப்பாக இருக்கும் சூழலில், தொடருக்கு முன்பிருந்தும், தொடர் ஆரம்பித்த பின்னரும் அதிகமான கவனத்தை பெற்ற வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியாதான். குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு வந்து, கேப்டன் பொறுப்பையும் பெற்றது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடம் சற்று பிளவை உண்டாக்கியது. குறிப்பாக, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் – மும்பை போட்டியின்போது ரசிகர்கள் அவரை நோக்கி எதிர்கூச்சலிட்டது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
ஒரு இந்திய கிரிக்கெட் வீரருக்கு, இந்தியாவிலேயே இப்படி ஒரு சூழல் ஏற்பட்டது இதுதான் முதல்முறை என்கின்றனர் பலரும். அவர் மீதான எதிர்ப்புக்கு ரசிகர்களிடம் பல காரணங்கள் இருந்தாலும் அவை ஒரு எல்லையை தாண்டும் போது பிரச்னையாகிவிடுகிறது. இதுகுறித்து பல வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) இந்த விஷயத்தில் முதல்முறையாக வாய் திறந்துள்ளார். அவரது யூ-ட்யூப் சேனலில், கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னாவுடன் நேரலையில் பேசிய போது இந்த விஷயம் குறித்து ரசிகர்கள் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
சினிமா கலாச்சாரம்
சந்தோஷ் குமார் என்ற ரசிகர், “ஹர்திக் பாண்டியாவை நோக்கி எதிர்ப்பு கூச்சலிட்டது மிகவும் மோசமானது! மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதுகுறித்து ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமா? இது நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கை (Player Transfer). நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
அஸ்வின் அதற்கு வழக்கம்போல் தமிழிலேயே விளக்கம் அளித்த நிலையில்,”இருவருக்கும் எந்தப் பங்கும் இல்லை. இது ரசிகர்களின் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். கமெண்ட் பிரிவில் விராட் கோலி, எம்எஸ் தோனி பற்றி பேசுவதைப் பார்க்கிறோம். அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள். அந்த சம்பவம் மிகவும் வருத்தமாக உள்ளது. இது கிரிக்கெட், ஆனால் தற்போது இது ஒரு முழுமையான சினிமா கலாச்சாரமாக உள்ளது. எனக்கு தெரியும் பொசிஷனிங், பிராண்டிங், மார்க்கெட்டிங் போன்றவையும் இதில் இருக்கின்றன. ஆனால் ரசிகர் சண்டைகள் சற்று அசிங்கமாக உள்ளது.
ஒன்றாக செயல்பட வேண்டும்
உங்களுக்கு ஒரு வீரரை பிடிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக கூச்சலிடுங்கள், ஒரு அணி ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்?. இதற்கு முன்பு இதுபோல் (ஹர்திக் தலைமையில் ரோஹித் விளையாடுவது) நடந்ததில்லை என நாம் நினைக்கிறோம் சச்சின் கங்குலியின் கேப்டன்சியில் விளையாடினார்; சச்சினும் கங்குலியும் ராகுல் டிராவிட்டின் கீழ் விளையாடினார்கள்; சச்சின், கங்குலி, டிராவிட் மூன்று பேர் கும்ப்ளேவின் கீழ் விளையாடியுள்ளனர்; இவர்கள் அனைவரும் தோனியின் கீழ் விளையாடி உள்ளனர். அவர்கள் தோனியின் கீழ் விளையாடிய போது, இந்த வீரர்கள் கிரிக்கெட் ஜாம்பவான்களாக இருந்தனர். இதில் ஒன்றாகச் செயல்பட வேண்டும். இது நிகழ்நேர விளையாட்டு” என பதிலளித்தார்.