சூர்யா வெளியிட்டிருக்கும் அதிரடி அறிவிப்பு, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. `கங்குவா’, `புறநானூறு’ என லைன் அப்பில் இருந்த சூர்யாவிடமிருந்து இன்ப அதிர்ச்சியாக கார்த்திக் சுப்புராஜின் பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
‘கங்குவா’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. சூர்யாவும் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இதன் படப்பிடிப்பிற்கு இடையே சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘புறநானூறு’ படத்தின் அறிவிப்பு வெளியானது. இது சூர்யாவின் 43-வது படமாகும். மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில்தான், “’புறநானூறு’ படத்திற்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்தப் படத்திற்காக இணைந்திருக்கும் கூட்டணி சிறப்பு வாய்ந்த ஒன்று. இது எங்களின் மனதுக்கு நெருக்கமான படம். சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தகட்ட ஷூட்டிங் பணிகள் தொடங்கப்படும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று சூர்யா தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான் கார்த்திக் சுப்புராஜின் பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சூர்யா.
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பது அவரது 44வது படமாகும். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வெற்றியினால் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி உருவானது என எண்ணிவிட வேண்டாம். சூர்யாவின் அடுத்த படங்களை இயக்கப் போகும் இயக்குநர்கள் பட்டியலில் வெற்றிமாறன், ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், த.செ.ஞானவேல் எனப் பலரும் உள்ளனர். அத்தனை பேருமே சூர்யாவிடம் ஒன்லைன் சொல்லி, அதன் ஸ்கிரிப்ட் வேலைகளையும் ஒரு பக்கம் கவனித்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜின் படம் ‘Love, Laughter, War’ என்ற டேக் லைனுடன் வெளியாகியிருக்கிறது. இது முழுக்க முழுக்க சூர்யாவுக்காகவே உருவான கதை என்கிறார்கள். சுதா கொங்கராவின் படம் தொடங்க, இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்பதால், அதற்குள் ‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நடத்தி முடித்துவிட பக்காவாகத் திட்டமிட்டு வருகிறார்கள். பவுண்டட் ஸ்கிரிப்ட்டும் ரெடி என்பதால், வெகு விரைவில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு இருக்கும் என்றும், தேர்தல் முடிந்த உடன், படப்பிடிப்புக்குக் கிளம்புகின்றனர் என்றும் சொல்கிறார்கள்.