90'ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் தள்ளிப்போகாமல் இருக்க, தள்ளிவைக்க வேண்டியது இதைத்தான்!

கன்னத்தில் கை வைத்தபடி உள்ளே நுழைந்தார் ராம். தனக்கு முன் வரிசையாக பெயர் பதிவு செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு தானும் வரிசையில் நின்றார். காட்டன் சுடிதார், அலட்டிக் கொள்ளாதப் புன்னகை, லூசாக இழுத்துச் சேர்த்துக் கட்டியப் போனி டெயில் என பார்க்க அழகாக இருந்த அந்தப் பெண்தான் ரிசப்ஷனில் உட்கார்ந்து பெயர் பதிவு செய்து கொண்டிருந்தார்.

ராம் அந்த டென்டல் க்ளினிக்குக்கு இப்போது தான் முதன்முறையாக வருகிறார். சுற்றும் முற்றும் உற்றுப் பார்க்கிறார். பல் வரிசை காட்டி அழகாக சிரிக்கும் மாடல்களின் புகைப்படங்கள், பற்சிகிச்சை குறித்த விளக்கப் படங்கள், பற்பராமரிப்பு குறித்த விளக்க அட்டவணைகள் போன்றவை சுவற்றில் மாட்டப்பட்டிருந்தன.

“உங்கள் அழகான புன்னகையின் ரகசியம் பற்கள் மட்டுமே’’

என டாக்டரின் அறைக்கதவில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் ராம்.

“சார் நீங்க வாங்க?’’ அந்தப் பெண் அழைத்ததும் , அவரை சரியாக நிமிர்ந்து கூட பார்க்காமல் அவர் முன்னால் போய் நின்றார் ராம்.

“சார்… உங்க பேரு, வயசு சொல்லுங்க?’’

அந்தப் பெண்ணின் குரலைக் கேட்டதும் ராம் தன் சட்டைக் காலர் பட்டன் கழுத்துவரை போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு குனிந்த வாக்கில் பேசத் தொடங்கினார்.

“மேம்… மேம்.. என் பேரு ராம்.

வயசு 36

23 ஆகஸ்டு 88 ல பிறந்தேன்.

கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்.

ஐ.டி ல வொர்க் பண்றேன்.

சொந்த ஊரு கொடைக்கானல்

இப்ப வேலைக்காக சென்னைல இருக்கேன்’’

மடமடவென சொல்லி முடித்துவிட்டு அருகில் இருந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்து முடித்தார்.

Smile

“சார்… சார்… நீங்க ஜாதகம் பாக்க வந்தீங்களா… இல்ல பல் வலிக்கு வந்தீங்களா?’’ அந்தப் பெண் சிரித்தபோதுதான் சுய நினைவுக்கு வந்தார் ராம்.

“டேய் இந்த வருஷமாச்சும் கல்யாணம் பண்ணி தொலைடா…தள்ளிப் போயிட்டே இருக்கு ’’ என்று அம்மா போனில் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்த ராம் ரிசப்ஷனிஸ்டிடம் தன் ஜாதகம் குறித்துப் பேசியதை நினைத்து கூச்சம் தாங்காமல் வேகமாக அங்கிருந்து கிளம்பினார்.

“சார் … நீங்க 90ஸ் கிட்டா? கவலைப்படாதீங்க… சீக்கிரம் கல்யாணம் நடக்கும்’’ என்று அந்தப் பெண் கிளம்பும் போது சொன்னதைக் கூட காதில் வாங்காமல் கிளம்பி வந்ததை வழியெல்லாம் நினைத்துக் கொண்டே நடந்தார் ராம்.

தன்னைவிட இளம் வயதினரெல்லாம் திருமணம் ஆகி குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட, நல்ல வேலை நல்ல சம்பளம் என எல்லாமிருந்தும் தனக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பது குறித்த கவலை ராமின் மனதில் வலியாக மாறியிருந்தது.

சிறு வயதிலிருந்து படிப்பு… படிப்பு… பிறகு வேலை… வேலை. காதலிக்க வேண்டிய வயதில் தன்னோடு பழகியப் பெண்களை எல்லாம் சகோதரி என்ற எல்லைக்குள்ளேயே வைத்துவிட்டார். திருமண வயது வந்த போதும், இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே என்று நாட்களைக் கடத்திவிட்டார். அதன்பிறகும் விட்டு வைப்பது நல்லதில்லை என்று வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். குடும்பச்சூழல், பணிச்சூழல், ஜாதகம் அது இதுவென அழுத்தமான காரணங்கள் எதுவுமில்லையென்றாலும் ராமுக்கு இதுவரை ஒரு வரன் கூட அமையாமல் போனது தான் ஆச்சரியம்.

`மச்சான்… தலை நிறைய கொத்துக் கொத்தா முடி இருக்கு. சரக்கு கிரக்குனு எந்தப் பழக்கமும் இல்ல, தொப்பையும் இல்ல, பொண்ணுங்க பாத்தா கொத்திட்டுப் போற மாதிரி தான் வேலை, சம்பளம்னு செட்டில் ஆகி இருக்கே… ஆனா என்ன ரீசனுக்கு உன்ன எவளுக்கும் புடிக்கலை மச்சான்?’’

ராமின் நண்பர்கள் அவரை துருவித் துருவிக் கேட்பதும் அதற்கு சரியான பதில் தெரியாமல் இவரே மண்டையை உருட்டிக் கொள்வதுமாய் நாட்கள் நகர்ந்துவிட்டன.

Young Man I 90’s Kid

“பேசாம லவ்வு கிவ்வுனு ஏதாச்சும் பண்ணித் தொலையேன். அப்டியாச்சும் நடந்தா கூட சாதி பாக்காம கல்யாணம் பண்ணி வைக்கிறோம்’’ என்று வீட்டிலேயே சொல்லிவிட்டார்கள். ஆனாலும் இதுவரை எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவருக்கு காதலைச் சொல்ல பயம்.

தெனாலிராமன் கமலஹாசன் கேரக்டர் போல், நின்றால் பயம் , நடந்தால் பயம், எதிரில் ஒரு பெண் வந்தால் வாய் திறந்து பேச பயம். ஆக மொத்தம் ராம் ஓர் ஆகச்சிறந்த இன்ட்ரோவெர்ட்.

என்னவோ தெரியவில்லை. ரிசப்ஷனில் பார்த்தப் பெண்ணிடம் தன்னை அறியாமல் ஜாதகத்தைச் சொல்லிவிட்டு வந்தது ஏன் என்று தெரியாத குழப்பம். பல் வலி வேறு படுத்தி எடுத்தது. இரவெல்லாம் தூக்கமில்லை. ரிசப்ஷனிஸ்ட் பெண் வாய்விட்டுச் சிரித்தபோது அவர் பற்கள் அழகாக இருந்ததையே மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தார் ராம்.

அந்தப் பெண் மீது அவருக்கு இருப்பது காதல் இல்லை என்றாலும் அந்தப் பெண்ணைப் போல ஒரு ஹோம்லியான பெண்ணைத் தான் ராம் தனக்கான துணையாகத் தேடிக் கொண்டிருந்தார். அவர் பணிபுரியும் சூழலில் பெரும்பாலான பெண்கள் தைரியமாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், கூடவே ஜாலியாக அரட்டை அடிக்கும் மாடர்ன் யுவதிகளாகவும் இருந்தார்கள். அவர்கள் மீது ராமுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் அவரின் இன்ட்ரோவெர்ட் குணத்தால் அவர்களில் ஒருவரைக் கூட ராமால் தன் வாழ்க்கைத் துணையாக யோசிக்கக் கூட முடியவில்லை.

Love

கல்லூரி காலத்தில் தொலைக்காட்சியில் பக்திப் பாடல்கள் பாடும் பெண் ஒருவர் மீது ராமுக்கு க்ரஷ் இருந்து பின் அந்த எண்ணமும் காணாமல் போனது. அதன்பின் பல ஆண்டுகளாக கனவுகளில் மட்டுமே கற்பனைக் காதலில் தனக்கான ஒருத்தியை உருவாக்கி வைத்திருந்தார். இப்போது தன் கற்பனைக்கு உருவம் கொடுத்த மாதிரி நேரில் ஒருத்தியைப் பார்த்ததும் மனம் முழுக்க குழப்பம். அவளுக்கு திருமணம் ஆகி இருக்குமா? அப்படியே ஆகாமல் போனாலும் தன்னை அவர் ஏற்றுக் கொள்வாரா? என்றெல்லாம் ராம் யோசித்து யோசித்து கடைசியில் தூங்கியும் போனார்.

மறுநாள் அலுவலகம் முடிந்ததும் அண்ணா நகர் டவர் பார்க்கிற்கு அவர் நண்பன் ரவி ஜாகிங் போக ராமை தன்னுடன் துணைக்கு அழைத்துச் சென்றார்.

“என்ன மச்சான்… கன்னம் பன்னு மாதிரி வீங்கி இருக்கு. உன்னை எல்லாம் யாரும் `பளார்’னு அடிக்கக் கூட மாட்டாங்களே?’’

ரவி பல் வலியை கிண்டல் அடிப்பதைக் கூட பொருட்படுத்தாத அளவுக்கு எதையோ கண்டுபிடித்ததைப் போல் தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தார் ராம்.

நீல நிற டீ-ஷர்ட், முழங்காலை மட்டும் மறைக்கிற அளவுக்கு முக்கால் அளவு கொண்ட ஷார்ட்ஸ், ஜாக்கிங் ஷூஸ், உச்சந்தலையில் தூக்கிக் கட்டிய போனி டெயில் என வியர்வையில் நனைந்தபடி தன்னை நோக்கி ஓடி வந்த பெண்ணைப் பார்த்து ஷாக்காகி நின்றார் ராம்.

அதே ரிசப்ஷனிஸ்ட் பெண்.

love

இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டு நேரெதிரில் நின்றார்கள். ராம் சற்றும் எதிர்பார்க்காததால் தலை குனிந்து கொண்டார். அப்போது ரவி அங்கிருக்காமல் ஜாகிங்கில் பிஸியாகி ஓட ஆரம்பித்தார்.

“அப்றம் பல் வலி எப்படி இருக்குங்க?. நாளைக்கு க்ளினிக் வாங்க உங்க அப்பாயின்மெண்ட் பெண்டிங்ல தான் இருக்கு’’

அவ்வளவு தான் பேச்சு. கொஞ்ச நேரத்தில் காணாமல் போனார் அந்தப் பெண்.

ரவியிடம் நடந்ததைச் சொல்லிவிட்டு மாலை அந்த க்ளினிக் போனார் ராம். ரிசப்ஷனில் அந்தப் பெண் இல்லை. வேறொரு பெண் தான் அங்கிருந்தார்.

“ராம்…ராம்.. ராம்னு யாரும் இருக்கீங்களா?’’ ரிசப்ஷனில் இருந்த புதிய பெண் ராமை டாக்டர் அறைக்கு அனுப்பி வைக்கவும், வேறு வழியில்லாமல் அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே போனார்.

“உட்காருங்க ராம்’’

அதே குரல். இது பார்க்கில் பார்த்த அந்த ரிசப்ஷனிஸ்ட் பெண்ணின் குரல் தானே… முகம் பார்க்க முயன்றார். குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்த அந்தப் பெண் ராமை நிமிர்ந்துப் பார்த்தார்.

அதே பெண் தான்.

“நீங்க ரிசப்ஷனிஸ்ட் தானே… டாக்டர் இன்னும் வரலையா?’’

மெதுவான குரல் எடுத்துப் பேசினார் ராம்.

பதிலுக்குச் சத்தமாகச் சிரித்தார் அந்தப் பெண்

“நான் தான் டாக்டர் ஸ்வேதா. 7 வருஷமா டென்டிஸ்ட்டா இருக்கேன். அன்னைக்கு ரிசப்ஷனிஸ்ட் கொஞ்சம் லேட்டா வந்தாங்க. அவங்க வர வரைக்கும் நான் தான் ரெஜிஸ்ட்டர் பண்ணிட்டு இருந்தேன். சொந்த க்ளினிக்குங்க…. ஈகோ பாத்துட்டு பேஷண்ட்ஸை சும்மா வெயிட் பண்ண வைச்சா என் பேரு தான் கெட்டுப் போகும். நான் சொல்றது கரெக்ட் தானே..’’ – ராமுக்கு கிர்ர்ரென்று இருந்தது.

Doctor

“கொஞ்சம் மவுத்தை நல்லா ஓபன் பண்ணுங்க..’’ சிகிச்சைக்கான கருவிகளோடு டாக்டர் ஸ்வேதா ராமின் அருகில் வந்து நின்றார்.

ராமின் கன்னத்தில் கை வைத்துப் பிடித்த ஸ்வேதா அவர் பற்களை லென்ஸ் வைத்து ஒற்றைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தது ராமுக்கு என்னவோ போலிருந்தது. பல்லில் இருந்த வலி முதன் முறையாக இதயத்துக்கு இடம் மாறியதை உணர்ந்தார். அதன் பெயர்தான் காதலா.. கண்கள் மூடிக் கொண்டார்.’’

“ராம் … பயப்படுற அளவுக்கு ஒன்னுமில்ல, சரி பண்ணிடலாம்’’ ஸ்வேதா மருந்து சீட்டு எழுதிக் கொண்டிருந்தார்.

நிமிர்ந்து கூட பார்க்காமல் சீட்டை வாங்கிக் கொண்டார்.

“அப்றம் ராம்… என் பேரு ஸ்வேதா.

எனக்கு ஒரு லவ் ஃபெயிலியர். கல்யாணமே வேணாம்னு தான் இவ்ளோ நாளா இருந்தேன். என்னோட கஸின் ப்ரதர் ரவி உங்களை பத்தி அடிக்கடி சொல்வாரு. ஒரு இண்ட்ரோவெட் பையன் இருக்கான். வாயை தொறந்து பேசவே மாட்டான்னு. அன்னைக்கு நீங்க ஐடில வேலை பாக்குறேன்னு சொன்னப்பவே நீங்க அண்ணனோட ப்ரெண்ட் ராம் தானோனு டவுட் வந்துச்சு. போன் பண்ணி சொன்னேன். அப்றம் தான் நேத்து பார்க்குக்கு உங்களை கூட்டிட்டு வந்தார்.

நீங்க எதிர்பார்க்குற மாதிரி நான் ஹோம்லியும் இல்ல, மாடர்னும் இல்ல… ஆனா என்னவோ தெரியலை… உங்களைப் பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுது. நீங்க என்ன சொல்றீங்க?’’

ஒரே கோர்வையாகப் பேசி முடித்த ஸ்வேதாவின் பேச்சைக் கேட்டு வியர்த்து கொட்டியது ராமுக்கு.

`இதெல்லாம் நிஜமா…பொய்யா… ’ தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.

நிஜம் தான். வாய் திறந்துப் பேசாமல் உறைந்து நிற்கிறார். ஸ்வேதாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

Love

“இன்னும் ஒரு வாரம் கூட டைம் எடுத்துக்கோங்க… ஆனா நீங்க என் கண்ணைப் பாத்து பிடிச்சிருக்குனு சொல்லுங்க… பிடிக்கலைனு கூட சொல்லுங்க… நான் வெயிட் பண்றேன்’’ ஸ்வேதா ராமுக்கு விடை கொடுத்துவிட்டு அடுத்த பேஷண்டை அழைத்தார்.

ராம் நேராகப் போய் ரவியை கட்டி அணைத்தார்.

“எதுக்கு மச்சான் ஒரு வாரம் ..ஈவினிங் ஸ்வேதாவை வீட்டுக்கு வர சொல்றேன். லவ் யூனு சொல்லிட்டு உன் லைப்பை ஸ்டார்ட் பண்ணுடா’’

இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டார் ராம்.

ஸ்வேதாவை பார்த்து எப்படிச் சொல்வது? பலமுறை கண்ணாடி முன்பாக நின்று ஒத்திகைப் பார்த்துவிட்டார். அதற்குள் மாலையும் வந்துவிட ரவியும் ஸ்வேதாவும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள்.

“என்ன ராம் பேச மாட்டீங்களா?’’

ஸ்வேதா தான் ஆரம்பித்தார்.

“அதுவந்து…’’ ராம் ஆரம்பிக்கும்போதே `டீ போடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு சமையல்கட்டுக்குப் போனார் ரவி.

ராம் இதுவரை எந்தப் பெண்ணிடமும் காதலைச் சொன்னதில்லை. எந்தப் பெண்ணும் தன்னிடம் காதலைச் சொல்கிற அளவுக்கு அவர்களை ஈர்க்கவும் முயன்றதில்லை.

ஆனால் `எனக்கு மட்டும் ஏன் கல்யாணம் ஆகலை. என்னை ஏன் யாருக்கும் பிடிக்கலை’ என சுய காரணங்களை ஆராயாமலே 90ஸ் கிட் என ஒரு தலைமுறையில் சிலருக்குக் கிடைத்தப் பொதுவான `திருமணம் ஆகாத ‘அனுபவத்தை வைத்துத் தனக்கும் அப்படித்தான் நடக்கும் என தானாகவே நினைத்துக் கொண்டார்.

உண்மயைச் சொல்வதென்றால் 90’ஸ் கிட்ஸில் பெரும்பான்மையானோருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆகாதவர்கள் சிலரின் ஏக்கமும் சூழலும் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருப்பதாலேயே, ராம் தனக்கு திருமணம் ஆகாது என்கிற பயத்தைத் தனக்குள் பொருத்திக் கொண்டார். அவர் பயம் தான் அவருக்கு முதல் எதிரி. துணிந்து பேசியிருந்தால் இதுவரை வரனாக வந்தப் பெண்களில் யாரோ ஒருவர் கூட ராமுக்குப் பிடித்துப் போயிருக்கலாம். ராம் அதைச் செய்யவில்லை. இப்போது அப்படியில்லை. ராமைப் பிடித்திருப்பதாக முன்கூட்டியே சொல்லிவிட்டு ஒருத்தி அவர் கண்முன் வந்து நிற்கிறாள்.

Love

ராம் , ஸ்வேதாவிடம் பேச பயந்துகொண்டு சமையல் அறைக்குப் போகிறார். தட்டில் ரவி தயாராக வந்திருந்த தேநீர் குவளைகளை எடுத்துக் கொண்டு எதிரில் வரவும் ராம் அதை தன்னிடம் கொடுக்கும்படி வாங்கிக் கொண்டார்.

`மச்சான் இதுதான் உனக்கு கடைசி சான்ஸ்… நீயே முடிவு பண்ணிக்க’’ ரவி தூரமாகப் போய் உட்கார்ந்து கொண்டார். ராமுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெண் பார்த்து ஓய்ந்த நினைவுகளெல்லாம் வந்து போயின. பல் வலியோடு சென்ற போது ரிசப்ஷனில் பார்த்த ஸ்வேதாவின் சிரிப்பு மீண்டும் மீண்டும் வந்து போனது. இன்னும் பத்து நிமிடங்களில் ஸ்வேதா கிளம்பிவிடுவார். பிறகு மொத்தமாக தன் வாழ்க்கைக்குள் அவர் நுழையப் போவதில்லை என்று மட்டும் தெரிகிறது. துணிந்து எதிரில் போய் நின்றார்.

“ஸ்வேதா… நீங்க ஹோம்லியா மாடர்னா எனக்கு தெரியாது. ஆனா உங்க ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கு. அது உங்க மனசுல இருந்து வருது. அதனால தான் உங்க ஸ்மைல் ரொம்ப க்யூட்டா இருக்கு. உங்க க்ளினிக் கதவுல ‘ உங்கள் அழகான புன்னகையின் ரகசியம் பற்கள் மட்டுமே’னு எழுதியிருக்கீங்கல்ல… அது தப்பு, மனசும் தான் காரணம். பல்லே இல்லாத குழந்தைகள் சிரிப்பும் பல் விழுந்த பாட்டியோட சிரிப்பும் கூட அழகா இருக்கும் தானே… அதனால பற்கள் மட்டும் தான் காரணம்னு எழுதினதை மாத்திடுறீங்களா?’’ ராம் பேசியதைக் கேட்டு ரவியும் ஸ்வேதாவும் சத்தமாகச் சிரித்தார்கள்.

கையில் இருந்த தேநீரை இருவருக்கும் கொடுத்தார் ராம். இங்கிதம் புரிந்துகொண்டு வெளியே போனார் ராம். ஸ்வேதா டீயில் மூழ்கி இருந்தார். “எனக்கு உங்களை மாதிரி அழகா பேச வராது. ஆனா உங்க கூட அழகா வாழ முடியும்னு தோணுது. என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா ஸ்வேதா?’’

டீ கப்பை சட்டெனெ வைத்துவிட்டு நிமிர்ந்துப் பார்த்தார் ஸ்வேதா.

“இப்ப என்ன சொன்னீங்க?’’

ராம் ஸ்வேதாவின் கண்கள் பார்த்து மீண்டும் சொன்னார்.

“ஐ… லவ் யூ ஸ்வேதா’’

Love I 90’s Kids

இப்போது ஸ்வேதாவுக்குப் பேச்சு வரவில்லை. வெட்கத்தில் தலை குனிந்தார்.

ஒரு பெண்ணின் வெட்கத்தைப் பார்ப்பது ராமுக்கு புதிதாக இருந்தது. அந்த வெட்கத்துக்கு காரணம் தாம்தான் என்று தெரிந்ததும் ராமுக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. ஸ்வேதாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ரவி “லவ் யூடா மச்சான்’’ என்று ராமை அணைத்துக் கொண்டார்.

இதுவரை ராமின் மனதில் இருந்த தேவையற்ற தயக்கங்கள் உடைந்த நேரத்தில் அவர் வாழ்வில் காதல் பூத்திருந்தது.

– ரகசியங்கள் தொடரும்

– அர்ச்சனா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.