சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்கும் பெத்தபெருமாள் (த்ருவ்), பாண்டி (இஸ்மத் பானு) தம்பதியினருக்குத் திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் குழந்தை இல்லை. இந்தப் பிரச்னையை மையமாக வைத்து பெத்தபெருமாளின் எதிரிகள் அதைக் கிண்டலடிக்கும் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் பெத்தபெருமாளின் அக்கா, அவரை விட 15 வயது குறைவான தனது மகளை அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிகள் எடுக்கிறார். பேரக் குழந்தை வேண்டும் என்பதற்காக, அவரது தாயாரது விருப்பமும் அதுவாகவே இருக்கிறது. இப்படி வெறும் சமுதாயம் மட்டுமல்ல, நெருங்கிய உறவினர்களாலும் குழந்தை இல்லாத தம்பதிகள் எதிர்கொள்ளும் அக மற்றும் புற பிரச்னைகளைக் மையமாக வைத்து நகர்வதே இந்த `வெப்பம் குளிர் மழை’.
கிராமத்து முரட்டு இளைஞராகக் கேலி கிண்டல் செய்யும் இடத்தில் கோபப்படுவது, மனைவியிடம் உருகுவது, தன்னிலை உணர்ந்து உடைந்து அழுவதென அறிமுக நடிகரான த்ருவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். செயற்கையில்லாத வெள்ளந்தி சிரிப்பு, பெத்தபெருமாளை ஆசுவாசப்படுத்த தன் உணர்வுகளை யாரிடமும் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளே புழுங்குவது என இஸ்மத் பானுவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதமாகப் பொருந்திப்போயிருப்பதும் ப்ளஸ்! மாமியாராக வரும் ரமா, குழந்தை பிறப்பதற்கு முன், பின் என இரண்டு பரிமாணங்களிலும் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். கதைக்குப் பெரிதாகச் சம்பந்தமில்லாவிட்டாலும் ஆங்காங்கே வந்து கிச்சுகிச்சு மூட்ட முயல்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
சங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை, காட்சிகளின் உணர்வுகளைச் சிதைக்காமல் அதன் போக்கிலே கொண்டு செல்கிறது. பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப கிராமத்தின் ‘வெப்பம் குளிர் மழை’ ஒளியுணர்வில் மிஸ்ஸிங். இரண்டாம் பாதியில் எந்தத் திசையில் நகர்வது எனத் தெரியாமல் ஒரே ஏரியாவுக்குள் மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டிருக்கும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் திரவ் கூடுதல் கண்டிப்புடன் வெட்டியிருக்கலாம்.
மகப்பேறு என்பது கிராமங்களில் எவ்வாறு ஓர் இறுக்கமான பிரச்னையாக இருக்கிறது என்பதைப் பேச முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. குழந்தையின்மை என்றாலே பெண்கள்தான் காரணம் என்ற தவறான பொதுப்புத்தியை காட்சிமொழியாகக் கேள்வி கேட்டிருப்பது சிறப்பு. திரைக்கதையில் பிரசார நெடியாக அதைச் செய்யாமல் போகிற போக்கில் எதார்த்தமாகச் சொல்லியிருப்பதும் கூடுதல் பலம் சேர்க்கிறது.
இருப்பினும் குழந்தை இல்லாத பிரச்னையைப் பேச, கணவனை மையமாக வைத்தே அதிகப்படியான காட்சிகள் எழுதப்பட்டுள்ளன. மனைவி எதிர்கொள்ளும் சமூக அழுத்தத்தை மையமாக வைத்துக் கையாண்டிருந்தால் இன்னும் அழுத்தமாகவும் இருந்திருக்கும், இந்தப் பிரச்னை தொடர்பான மற்றொரு கோணமும் கிடைத்திருக்கும்.
மருத்துவமனையை விடுத்து கோயிலுக்குச் சென்றாலே குழந்தை பிறந்துவிடும் என்று நம்பும் காட்சிகள், அறிவியலுக்கு எதிராகவும் ஆணாதிக்கத்தின் விளைவாகவும் வரும் பிரச்னைகள் எனக் கிராமங்களில் இருக்கும் விழிப்புணர்வில்லாத தன்மையை விவரிக்கும் காட்சிகளைப் பாராட்டலாம். ஆனால் கடைசியில் ‘இரு மனங்கள் சந்தோஷமாக இருந்தால்தான் புதிய உயிர் பிறக்கும்’ போன்ற வசனங்களும், கதாநாயகன் மாட்டிற்குச் செயற்கையாகக் கருத்தரிப்பு செய்வதால்தான் அவருக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று சித்திரிக்கும் காட்சிகளும் அபத்தத்தின் உச்சம்!
இதனாலேயே இதற்குமுன்பு வரை படம் ஆக்கப்பூர்வமான கருத்தைப் படம் பேசுகிறது என்று நினைத்ததை நாமே அழித்துவிட வேண்டியிருக்கிறது. அதாவது காதல் இருந்தால், தம்பதியர் மகிழ்ச்சியாக இருந்தாலே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும், உடல் உபாதைகள், பிரச்னைகள் பெரிதல்ல என்ற கருத்தை முன்மொழிவதால் அறிவியலையும் மருத்துவத்தையும் ஒதுக்கிவிடும் ஆபத்து படம் சொல்லும் கருத்தில் எட்டிப் பார்க்கிறது.
மொத்தத்தில் பிரச்னையை வேண்டிய தகிப்புடன் வெப்பமாகச் சரியாகக் கடத்திய திரைப்படம், அதற்குத் தீர்வாகச் சொல்லப்படும் விஷயங்கள் மூலமாக நம்மைக் குளிரவும் வைக்காமல் நனையவும் வைக்காமல் அதே வெப்பத்திலேயே மீண்டும் சிக்க வைத்துவிடுகிறது.