மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு திரைத்துறையினர் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பாலாஜியுடனான நினைவுகளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறிவரும் வேளையில், இவர் குறித்து அவ்வளவாகத் தெரியாத சில தகவல்களும் வெளியாகி வருகின்றன.
பாலாஜியாக சின்னத்திரையில் நுழைந்தவரை ‘சித்தி’ சீரியலின் கேரக்டர் பெயரான ‘டேனியல்’, டேனியல் பாலாஜியாகவே மாற்றிவிட்டது. ‘சித்தி’ தொடருக்குப் பிறகு தீவிரமாக சினிமா முயற்சியிலிருந்தவருக்கு சினிமாவில் நடிகராக வேண்டுமென்பதைக் காட்டிலும் இயக்குநராகலாம் என்கிற ஆர்வம் அதிகமாக இருந்ததாம். ஒரு படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். அந்தப் படம் நடிகர் முரளி நடித்த ‘காமராசு’.
இந்தப் படத்தில் டேனியல் பாலாஜி கமிட்டானது குறித்துப் படத்தின் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகனிடம் பேசினோம்.
“முரளியின் மார்க்கெட் பிசியா இருந்தப்ப சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க ‘காமராசு’ படத்தின் ஷூட்டிங் தொடங்குச்சு. ஹீரோயினாக லைலா, நடிகர் வடிவேலுன்னு பெரிய நட்சத்திரங்களைக் கமிட் செய்து தொடங்கிய படத்தின் தயாரிப்பு பொறுப்பு கொஞ்ச நாள் கழிச்சு கை மாறி வேறொரு தயாரிப்பு நிறுவனத்துக்கிட்ட போச்சு.
அந்தச் சமயம் நடிகர் முரளி வீட்டுக்கு நான் போயிருந்த ஒரு சமயம் முரளியின் அம்மாகிட்டப் பேசிட்டிருந்தப்ப அவங்கதான் ‘என் தங்கச்சி மகனும் படம் எடுக்கணும்னுதான் ஆசைப்படறான். ஆனா அண்ணன்கிட்ட சிபாரிசு பண்ணச் சொல்லிக் கேக்க அவனுக்கும் தயக்கம். என் மகன் முரளியுமே அவனுக்குத் திறமை இருக்கு, வாய்ப்பு அதுவா அமையும்னு சொல்லிடுறான். அதனால உங்க கூட சேர்த்துக்க முடியுமா’ன்னு கேட்டாங்க. அப்பதான் முரளி, தன் தம்பியா இருந்தாகூட யார்கிட்டயும் சிபாரிசு பண்ண மாட்டார்ங்கிற விஷயமே எனக்குத் தெரிய வந்தது.
அதனால ‘சரி, வரச் சொல்லுங்க’னு ‘காமராசு’ படத்துலயே சேர்த்துக்கிட்டேன். இந்தி நல்லாத் தெரியும்கிறதால லைலாவுக்கு டயலாக்கைப் புரிய வைக்கிற பொறுப்பை அவர்கிட்டதான் கொடுத்திருந்தேன்.
ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகு செட்டில் நடிகர், நடிகைகளுக்குக் கிடைக்கிற மரியாதையை வியந்து போய் பார்த்திட்டிருப்பார். அப்பவே, இவருக்கு டைரக்சன் சரி வராது, நடிகராகத்தான் வலம் வருவார்னு நான் கணிச்சுட்டேன்.
ஷூட்டிங் போயிட்டிருந்தப்ப ஒருநாள் செட்ல அவர் விளையாட்டுத்தனமா ‘ஆக்சன் கட்’ சொன்னதை முரளி பார்த்துட்டார்.
‘ஷூட்டிங்ல ஒரு இயக்குநருக்கு மரியாதை கொடுக்கத் தெரியலைன்னா, நீ இங்கிருந்து கிளம்பிடு’ன்னு திட்டிட்டார். நான் கூட அந்த விஷயத்தைப் பெருசா எடுத்துக்கலை. ஆனா அண்ணன் திட்டினதுல கோவிச்சுக்கிட்டு படம் முடியற வரைக்கும் வேலை பார்க்காம யூனிட்ல இருந்து கிளம்பிட்டார்.
அதுக்குப் பிறகு டைரக்டராகணும்கிற எண்ணமும் அவரை விட்டுப் போயிடுச்சு. ஆனாலும் நடிகரான பிறகு என்னைச் சந்திக்க வந்தார். சந்தோஷமா வாழ்த்தி அனுப்பினேன்.
அதுக்குப் பிறகு எங்காவது நிகழ்ச்சிகள்ல பார்த்தா மரியாதையாகப் பேசுவார். அண்ணன் வழியிலயே தம்பியும் குறைஞ்ச வயசுலயே இந்த உலகத்தை விட்டுப் போனதை நினைக்கிறப்ப ரொம்பவே வேதனையா இருக்கு” என்கிறார் அன்பழகன்.