ஓசூர் அரசு மருத்துவ ஊழியர்கள் அலட்சியம் –  குளுக்கோஸ் பாட்டிலை கையில் ஏந்திச் சென்ற நோயாளி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட கிராமம் மற்றும் மலை கிராமங்களிலிருந்தும், ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் என தினமும் 500-க்கும் மேற்பட்டோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் உரிய நேரத்துக்கு சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். அதே போல் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் வரும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகளை சக்கர நாற்காலியில் அழைத்து செல்ல ஆட்கள் இல்லாததால், நோயாளிகளின் உறவினர்களே அழைத்து செல்லும் அவல நிலை அவ்வப்போது நடக்கிறது.

இந்நிலையில், நோயாளி ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது மனைவியுடன் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் அவரை பொது வார்டுக்கு செல்லுமாறு கூறி உள்ளனர்.

மருத்துவ ஊழியர்கள் ஸ்டெச்சர் மூலம் அழைத்து செல்லாமல், நோயாளியின் கையில் செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலை அகற்றாமல் கழற்றாமல் அப்படியே அனுப்பியதால், கையில் ரத்தம் வழிந்த நிலையில் வலியுடன் நோயாளி கையில் குளுக்கோஸ் பாட்டிலுடன் வார்டு தெரியாமல் அலைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பொது வார்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் இது போன்ற சம்பவம் ஓசூர் அரசு மருத்துவமனையில் அடிக்கடி நடைபெறுவதால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற தயங்குகின்றனர்.

இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கூறும் போது, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மட்டுமே வருகிறோம். இங்கு பணம் கொடுத்தால் தான் மருத்துவ ஊழியர்கள் நன்கு கவனிக்கின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். சிகிச்சைகாக வரும் நோயாளிகளை வார்டுக்கு மாற்றும் போது கையில் போடப்பட்டு குளுக்கோஸ் பாட்டிலை அகற்றாமல் கையில் தூக்கி செல்லுமாறு கூறுகின்றனர். அது போன்று செல்லும் போது ரத்தம் வழிகிறது.

இதனை பார்த்தாலும் மருத்துவ ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு தயங்கி சிலர் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அரசு மருத்துவமனையே நம்பி உள்ள எங்களுக்கு இது போன்ற அலட்சியத்தால் சிகிச்சை பெற வருவதற்கே தயக்கமாக உள்ளது என கூறினார்.

இது குறித்து தலைமை பொறுப்பு மருத்துவர் ஞானமீனாட்சி கூறும்போது, மருத்துவமனையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமார பொறுத்தி கண்காணித்து வருகிறோம். ஆனால் குளுக்கோஸ் பாட்டில் செலுத்திய நோயாளி ஒருவர் கையில் தூக்கி சென்ற சம்பவம் மிகவும் தவறுதான். இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.