2 நாய்கள் மட்டுமே நடித்த படம் : விழாவிலும் பங்கேற்பு
இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த ஒரு படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் திப்பம்மாள் என்பவர் தயாரித்திருக்கிறார். அதற்கு 'கிளவர்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. செந்தில்குமார் சுப்பிரமணியம் இயக்கி உள்ளார். வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகுநாத் இசை அமைத்துள்ளார். படத்தின் அறிமுக விழாவில் படத்தில் நடித்த நாய்களும் பங்கேற்றது.
படம் பற்றி இயக்குனுர் செந்தில்குமார் கூறும்போது “இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளேன். அம்மா நாயிடமிருந்து குட்டி நாயை ஒரு சைக்கோ திருடி சென்று விடுகிறான். தனது குட்டியை அம்மா நாய் எப்படி கண்டுபிடித்து மீட்டு வருகிறது என்பதை கதைக்களமாக்கி அதை விறுவிறுப்பான திரைக்கதையில் திகிலும், திரில்லும் கலந்து படத்தை டைரக்ட் செய்துள்ளேன்.
புது முயற்சியாய் இந்த படத்தில் இரு நாய்களை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்கவில்லை. கமர்ஷியலாக படத்தை மக்கள் பார்த்து ரசிக்கும்படி இயக்கி உள்ளேன். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது” என்றார்.