காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றிய போது, தங்களின் முந்தைய ஆட்சி போல கொடூரமாக இருக்காது என்று தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தாலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இருந்த போதிலும், பெண்கள் உயர் கல்வி கற்க தடை உள்பட பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான்களின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ, அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது. அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம். விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். காபூலை கைப்பற்றியதுடன் தலிபான்களின் பணி முடிவடையவில்லை. அவர்களின் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது” என்றார்.