புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று அந்த கட்சியின் சார்பில் நாடு முழுவதும் கருத்துகள் கேட்டறியப்பட்டன. பாஜக அலுவலகங்களில் ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டன. இவற்றின் மூலம் மக்களின் கருத்துகள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டன. பாஜக அறிவித்த செல்போன் எண், நமோ செயலி, சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன.
27 பேர் குழு: இந்த சூழலில் 27 பேர் அடங்கிய பாஜக தேர்தல் அறிக்கை குழு பட்டியலை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் சார்பில் பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்டார்.
இந்த குழுவின் தலைவராக மத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் (உத்தரபிரதேசம்) நியமிக்கப்பட்டு உள்ளார். குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (தமிழ்நாடு), இணை ஒருங்கிணைப்பாளராக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் (மகாராஷ்டிரா) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா (ஜார்க்கண்ட்), பூபிந்தர் யாதவ் (ராஜஸ்தான்), அர்ஜுன் ராம் மேக்வால் (ராஜஸ்தான்), கிரண் ரிஜுஜு (அருணாச்சல பிரதேசம்), அஸ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), தர்மேந்திர பிரதான் (ஒடிசா), முதல்வர் பூபேந்திர படேல் (குஜராத்), முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா (அசாம்), முதல்வர் விஷ்ணு தியோ சாய் (சத்தீஸ்கர்), முதல்வர் மோகன் யாதவ் (மத்திய பிரதேசம்), முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி (உத்தர பிரதேசம்), முன்னாள் மத்திய அமைச்சர் ஜூவல் ஓரம் (ஒடிசா) ஆகியோரும்.
முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (பிஹார்), முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி (பிஹார்), துணை முதல்வர் கேவச பிரசாத் மவுரியா (உத்தர பிரதேசம்), மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் (கர்நாடகா), பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாக்டே (மகாராஷ்டிரா), பாஜக எம்பி ராதா மோகன் தாஸ் அகர்வால் (உத்தர பிரதேசம்), பாஜக மூத்த தலைவர் மஜிந்தர் சிங் சிர்ஸா (டெல்லி), மாநில முன்னாள் அமைச்சர் ஓ.பி.தினகர் (ஹரியாணா), பாஜக தேசிய செயலாளர் அனில் அந்தோணி (கேரளா), அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாரிக் மன்சூர் (உத்தர பிரதேசம்) ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.