சென்னை: மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கு இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தாய்மொழியாக தமிழ் எனக்குகிடைக்காதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியதைமுதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கி தமிழகத்தைச் சுரண்டிய திமுகவின் தமிழுணர்வு நாடகத்தை, தமிழக மக்கள் இனியும் நம்புவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நினைப்பாரேயானால், அவருக்கு ஏமாற் றமே பரிசாகக் கிடைக்கும்.
திமுகவினரைப் போல, மறைந்ததிமுக தலைவர் கருணாநிதியைப் போல, ஸ்டாலினைப் போல, மொழியை வைத்து நடத்தும் வியாபார அரசியலைச் செய்ய வேண்டிய அவசியம் மோடிக்கு இல்லை. இந்தியாவின் பிற மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், தமிழ் மொழிதான் தொன்மையான, இனிமையான மொழி என்று அவர் பெருமையுடன் கூறி வருகிறார்.
உலக நாடுகளின் தலைவர்களை தமிழகத்துக்கு அழைத்துவந்து, தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரத்தை பறைசாற்றியிருக்கிறார்.
எனவே, உண்மையிலேயே ஸ்டாலினுக்கு, தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், தேசியக் கல்விக் கொள்கையை தமிழகப் பள்ளிகளில் அமல்படுத்தி, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும், கட்டாயமாக தமிழ்மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எல்.முருகன் விமர்சனம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
மோடி இந்தியை பரப்புவதாக முதல்வர் ஸ்டாலின் பொய் செய்தியைப் பரப்புகிறார். மோடி தமிழில் பேச ஆரம்பித்தால், திமுகவை போன்ற ‘போலி திராவிட மாடல்’ ஆட்சியாளர்களுக்கு மீண்டும், மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பதுதான் உண்மை.
மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎஃப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் நடவடிக்கை எடுத்தது.
‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்’ என்றால், திமுக கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே, தமிழின்பெயரை சொல்லியே புளுகி வரும்உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.