புதுடெல்லி,
நாடு முழுவதும் இருந்து 600 வக்கீல்கள் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில் சில சுயநல சக்திகள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த கடிதத்தை பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு காங்கிரசை குற்றம் சாட்டியிருந்தார். அதாவது நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பது காங்கிரசின் பழைய கலாசாரம் என சாடியிருந்தார்.
ஆனால் தேர்தல் பத்திரம் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தபிறகு மத்திய அரசுதான் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “சுப்ரீம் கோர்ட்டின் தேர்தல் பத்திரங்கள் (பொதுமக்கள் இதை மிரட்டி பணம் பறிக்கும் ஊழல் என்று அழைக்கிறார்கள்) தீர்ப்பின் மூலம் ஊழல்களின் அடுக்குகள் அம்பலமாகி வருவதை பார்த்து நீதித்துறை அமைப்புக்கு கடிதங்கள் எழுதி அழுத்தம் கொடுக்கப்படுவது, பிரதமர் தானாகவே தலையிட்டு நீதித்துறை குறித்து எதிர்மறை கருத்துகளை கூறுவது எல்லாம் எதோ தவறாக நடப்பதை காட்டுகிறது. மேலும் அவரை ஏதோ பதற்றத்துக்குள்ளாக்கியும் இருக்கிறது. அரசியல் தலையீட்டால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பை நடத்துவது, மாநிலங்களவைக்கு நீதிபதியை அனுப்புவது, தேர்தலில் முன்னாள் நீதிபதியை வேட்பாளராக நிறுத்துவது, நீதிபதிகள் நியமனத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பது, தீர்ப்புகள் தங்களுக்கு எதிராக வரும்போது நீதித்துறை குறித்து கருத்து சொல்வதன் மூலம் சுதந்திரமான மற்றும் வலுவான நீதித்துறையை மோடிஜியின் அரசு அங்கீகரிக்கவில்லையோ?” என்று அதில் பிரியங்கா கேள்வி எழுப்பி இருந்தார்.
இதைப்போல மத்திய அரசின் கடன் அதிகரித்து வருவதற்கும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘நடப்பு நிதியாண்டில் ரூ.14 லட்சத்துக்கு மேல் கடன் வாங்க இருப்பதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது. ஏன்? நாடு விடுதலை அடைந்தது முதல் 2014 வரையிலான 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.205 லட்சம் கோடியாக கடன் அதிகரித்து இருக்கிறது. ரூ.150 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கப்பட்டு உள்ளது’ என சாடியுள்ளார்.
இன்று, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் கடன் இருப்பதாக கூறியுள்ள பிரியங்கா, இந்த பணம் தேசத்தை கட்டியெழுப்ப எந்த அம்சத்திற்கு பயன்படுத்தப்பட்டது? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.