புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் உள்ளார். இந்த ஊழலில் லஞ்சமாக கிடைத்த ரூ.100 கோடி பணத்தை் கோவா தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி செலவழித்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி அமைச்சர்கள், பஞ்சாப் மற்றும் கோவாவில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டிடம் அமலாக்கத்துறை நேற்று 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது. மதுபான கொள்கை தயாரித்த அமைச்சர்கள் குழுவில் இவரும் ஒருவர். இவருக்கு டெல்லி அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீடு, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் வீடு அருகே உள்ளது. ஆனால், இந்த வீட்டில் கைலாஷ் கெலாட் தங்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பாளராக இருந்த விஜய் நாயர் தங்கியிருந்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கைலாஷ் கெலாட் கூறியதாவது:
அரசு சார்பில் எனக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் நான் எப்போதும் தங்கியதில்லை. ஏனென்றால் எனது குடும்பத்தினர் வசந்த் கன்ஜ் பகுதியில் இருந்து மாறுவதற்கு விரும்பவில்லை. அதனால் அரசு இல்லத்துக்கு நான் ஒருபோதும் சென்றதில்லை. இதை நான் சிபிஐ அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன்.
எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில் விஜய் நாயர் தங்கியிருந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதேபோல் கோவா தேர்தல் பிரச்சார குழுவில் நான் இல்லை. அதனால் கோவா தேர்தல் பிரச்சாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.