ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில், அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத், மருது அழகுராஜ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி உள்ளிட்ட பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டை பையில் வைத்திருந்த 500 ரூபாய் கட்டை எடுத்து பிரித்து, அதில் ஆயிரம் ரூபாயை ஒரு பெண்மணிக்கும், அதே போல் மற்றொரு பெண்மணிக்கு ஆயிரம் ரூபாயையும் கட்சி நிர்வாகி மூலம் வழங்கினார். இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட, அது சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘ஆரத்திக்கு பணம் வழங்குவது வழக்கமாக இருந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இது போன்ற எந்த ஒரு விஷயத்திற்கும் பணம் வழங்கக் கூடாது.
ஆனால், தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளரை நேரடியாக ஆரத்தி எடுத்த பெண்மணிகளுக்கு பணம் வழங்கி உள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் வெயிலைத் தணிக்கும் வகையில் குளுகுளு ஜிகர்தண்டாவும், மதிய வேளையில் சுடச்சுட பிரியாணியும் வழங்கப்பட்டது. அதோடு, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அந்தப் பகுதி முழுவதும் பா.ஜ.க கொடிகள் மட்டும் கட்டப்பட்டிருந்த நிலையில் கூட்டணி கட்சி கொடிகளை கட்டுவதற்கு ஆள் இல்லாததாலும், கம்புகள் கிடைக்காததாலும் பா.ஜ.க, அ.ம.மு.க கட்சிக் கொடிகள் கட்டியிருந்த கம்புகளிலேயே கட்சி நிர்வாகிகள் கட்டிப் பறக்க விட்டிருந்தனர். இந்நிலையில், ஆரத்தி எடுத்தப் பெண்களுக்கு பணம் கொடுத்ததற்காகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே கூட்டம் நடத்தியதற்காகவும் ஓ.பி.எஸ் மீது அறந்தாங்கி காவல் நிலையத்தில் மூன்று பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆரத்தி எடுத்தப் பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.