மதுரை: தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மதுரை கோ.புதூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் தமிழர் கட்சியின் மதுரை வேட்பாளர் சத்யாதேவிக்கு ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது.. “நாம் தமிழர் கட்சி பதவிக்கானது அல்ல மக்களின் உதவிக்கானது. கட்சியை வைத்து பிழைக்க வந்தவர்கள் அல்ல, மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஒரேயாருமுறை எங்களை நம்பி வாக்களியுங்கள். வளர்ச்சியை தருகிறோம். எங்களின் வலிமையை உணர்த்தியவர்கள் நீங்கள். அஞ்சுவதும், அடிபணிவதும் தமிழர்களுக்கு கிடையாது.
மதம் சொல்லி, ஜாதி சொல்லி வந்தவர்கள் அல்ல நாங்கள். 6 தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு 7 விழுக்காடு வாக்குகள் பெற்றோம். அதில் திமுக திட்டமிட்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என எங்களை பிரச்சாரம் செய்ததால் 3 சதவீத வாக்குகள் இழந்தோம். திமுகவின் 60 ஆண்டுகள் பொய்யை நம்பியவர்கள் அதையும் நம்பினார்கள். இந்த தேர்தலில் 10 சதவீத வாக்குகள் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் சின்னத்தை பறித்துள்ளனர்.
டிடிவி தினகரன், ஜி.கே.வாசனுக்கு கேட்ட சின்னம் கிடைக்கிறது. எங்களுக்கு மறுக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது என நம்பி ஏமாந்து போனோம். சின்னம் போனால் என்ன இந்த தேர்தலில் சீமானுக்கும், அவரது எண்ணத்திற்கும்தான் வாக்கு என மக்கள் நிரூபிப்பார்கள்.
1976-ல் கொடுக்கப்பட்ட கச்சத்தீவு பிரச்சினையை தேர்தலுக்காக மோடியும், அண்ணாமலையும் தற்போது பேசி வருகின்றனர். அண்ணாமலை எடுத்துக் கொடுத்த ஆர்டிஐ தகவலை தற்போது தேர்தலுக்காக பேசுகின்றனர். கச்சத்தீவை மீட்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது மத்திய பாஜக அரசு சார்பில் கச்சத்தீவு கொடுத்தது கொடுத்ததுதான். அதை திரும்பவும் மீட்க முடியாது என்றனர். தற்போது தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார்கள்.
அதே அண்ணாமலையை குஜராத் கலவரம், மணிப்பூர் கலவரம் பற்றி ஆர்டிஐ எடுத்து தரச் சொல்லுங்கள். முதலில் பாஜகவின் ‘பி டீம்’ என்றனர். தற்போது பாஜக நாம் தமிழர் கட்சியின் ‘பி’ டீமாக உள்ளது. நான் பேசி வரும் கச்சத்தீவு பிரச்சினையை இப்போது அண்ணாமலை மூலமாக மோடி பேசுகிறார். தமிழர் உரிமை மீட்போம், தமிழகத்தை காப்போம் என முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசுகிறார். தமிழர் உரிமையை காப்போம் என கனிமொழி ஆகியோரும் பேசி வருகின்றனர். இப்படி எனது கொள்கையை பேச அனைத்துக் கட்சியிலும் ஆள் வைத்துள்ளேன்.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. அதேபோல் தமிழகத்தில் அதிமுக, திமுகவை நம்பாதீர்கள். 13 தலைமுறைக்கு ஒருமுறை மரபணு மாறிவிடும் என்கின்றனர். அதனால் தற்போதைய இளைஞர்களுக்கு தமிழர்களின் வரலாற்றை சொல்லி வருகிறோம். பாராளுமன்றத் தேர்தலில் ஆகப்பெரும் ஆளுமைகளை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். நேர்மைக்கு, எளிமைக்கு, தூய்மைக்கு, மாற்றத் துடிக்கும் தலைமைக்கு வாக்களியுங்கள்” என பேசினார்.