T20 World Cup squad: டி20 உலகக் கோப்பையின் ஒன்பதாவது பதிப்பு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளது. அவை ஒவ்வொன்றும் ஐந்து பேர் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் குரூப் Aவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், குரூப் Bயில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், குரூப் Cயில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகளும், குரூப் Dயில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் கடைசி வாரத்தில் வெளியாகும் என பிசிசிஐ தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது. இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2024 அணியில் ஏற்கனவே பலரது இடங்கள் உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், இந்த ஆண்டு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் பெயர்களும் இடம் பெற உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் அதற்கு ஏற்றார் போல் வீரர்களை தேர்வு செய்ய உள்ளது பிசிசிஐ. யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் போன்ற பல வீரர்கள் டி20 அணியில் இடம் பெற கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களின் பெயர்கள் டி20 உலகக் கோப்பை அணியில் உறுதி செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, ரோஹித் சர்மா இந்திய அணியின் டி20 கேப்டனாக தொடர்வார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் உறுதிபடுத்தி இருந்தார். ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெய் ஷாவின் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. “ரோஹித் ஷர்மா மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை 2024க்கான இந்திய அணியை தொடர்ந்து வழிநடத்துவார்” என்று கூறி இருந்தார்.
டி20 உலகக் கோப்பை அணியில் விக்கெட் கீப்பர் இடம் தான் பெரிய கேள்விக்குறியாக இருந்தது. KL ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பந்தின் செயல்பாடுகள் ஐபிஎல் 2024 போட்டிகள் வைத்து முடிவு செய்யப்படும். மேலும் கேஎல் ராகுலுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவர் மீதும் நிறைய கேள்விகளை வைத்துள்ளது பிசிசிஐ. இந்த போட்டியில் ஜிதேஷ் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் தற்போது இணைந்துள்ளனர். உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு ஐபிஎல்லில் அவர்களின் செயல்பாடுகள் குறித்து முடிவு செய்யப்படும்.
டி20 உலகக் கோப்பைக்கான உத்ததேச இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் , ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.