ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவிற்கும் குறைவாக பெற்றுக்கொள்ள முடியும் என்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நுகர்வோர்களுக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதம் அல்லது சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உள்நாட்டு; கோழி முட்டை ஒன்றின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று சிலர் ஊடகங்களுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது உள்நாட்டு முட்டை உற்பத்தி மொத்த நாளாந்த தேவையை தாண்டியுள்ளதுடன், உள்நாட்டு சந்தையில் கோழி முட்டை ஒன்று 42-48 ரூபாவிற்கு விற்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் சுட்டிக்கர்ட்டினார்.
நாட்டில் நாளாந்த சராசரியாக 65 இலட்சம் முட்டைகள் தேவைப்படுவதாகவும், தறபோது உள்நாட்டு கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி 75 இலட்சத்தை தாண்டிவிட்டதாகவும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மூடப்பட்ட அனைத்து கோழிப் பண்ணைகளும் தற்போது செயல்பட்டுவருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.