குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜட்பூர் என்ற இடத்தை சேர்ந்த ஜிவ்ராஜ் கோலி என்பவர், கடந்த 1997-ம் ஆண்டு குடிபோதையில் தன் மனைவி சவிதாவை வெட்டிக்கொலை செய்தார். சவிதா, தன் கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததால் கோபத்தில் அவரை வெட்டிக்கொலை செய்தார் ஜிவ்ராஜ். இது தொடர்பாக முதலில் ஒரு காவலரிடம் தெரிவித்த அவர், பின்னர் கோலி போலீஸில் சரணடைந்தார்.
ஆனால், இவ்வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதகமாக்கி, ஜிவ்ராஜ் கோலியை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இதை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் 1999-ம் ஆண்டு மேல் முறையீடு செய்தது.
இவ்வழக்கு கடந்த 25 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது இவ்வழக்கில் நீதிபதிகள் சுபேஹியா மற்றும் வியாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நீதிமன்றம், கோலியை விடுதலை செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் அறிவியல்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில், கோலி மீதான குற்ம் உறுதி செய்யப்படுவதாகவும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
‘காயத்தின் தன்மையை பார்க்கும்போது கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் குத்தி இருப்பது தெரிகிறது. எனவே, கோலி சிறைக்குச் செல்லவேண்டும்’ என்று தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கு 25 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருவது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். 6 வாரத்திற்குள் கோலி சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது கோலிக்கு 73 வயதாகிறது. கொலை நடந்து 27 ஆண்டுகள் கழித்த பிறகு, கோர்ட்டால் விடுவிக்கப்பட்ட பிறகு, 25 ஆண்டுகள் கழித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.