புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடியும் வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிறையில் வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம் என்று அவரது மனைவி சுனிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பை கோரவில்லை. அதேநேரத்தில், “கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். அவருடைய டிஜிட்டல் உபகரணங்களின் கடவுச் சொற்களைத் தர மறுக்கிறார். ஆகையால் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்” என்று அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து கேஜ்ரிவாலை வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றைய விசாரணையின்போது ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா கேஜ்ரிவால், “அமலாக்கத் துறையின் விசாரணை முடிவடைந்துவிட்டது. அவர் குற்றம் இழைத்தார் என நீதிமன்றம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது ஏன் அவரை சிறையில் அடைக்க வேண்டும்? மக்களவைத் தேர்தல் வரை கேஜ்ரிவாலை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்” என தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி, “அரவிந்த் கேஜ்ரிவாலை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். கேஜ்ரிவாலை பாதிக்கப்பட்டவர்போல் சித்தரிக்க முயல்பவர்கள் இதை உணர வேண்டும்.
இப்போது சில தார்மிக மற்றும் அரசியலமைப்பு கேள்விகள் எழுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே ‘குரு’வாக இருந்தார். குரு அரசியலில் சேர மாட்டேன் என்று கூறியதால், சிஷ்யர் அரசியலில் இறங்கி முதல்வராகவும் ஆனார். ஆனால், நேற்று டெல்லி ராம் லீலா மைதான்ததில் நடைபெற்ற மற்றொரு பேரணியின்போது கேஜ்ரிவால் தனது குருவை மாற்றிக் கொண்டார். இப்போது கேஜ்ரிவாலின் ‘குரு’ லாலு பிரசாத் யாதவ். லாலு யாதவ் கூட சிறைக்குச் செல்லும்போது தனது பதவியை ராஜினாமா செய்தார். கேஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா அல்லது புதிய அரசியலுக்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “ஒரு ராப்ரி தேவி உருவாகிக்கொண்டிருக்கிறார். கடந்த 10 நாட்களில் 3-4 முறை இதனை நான் கூறிவிட்டேன். விரைவில் ராப்ரி வெளியே வருவார் (அதாவது, சுனிதா கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்பார்). எந்த அரசாவது சிறையில் இருந்து இயங்கியது உண்டா? டெல்லியின் 3 அமைச்சர்கள் ஏற்கனவே சிறையில் இருக்கிறார்கள். சிறையில் இருந்தவாறு அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கான எண்ணிக்கை பலம் தற்போது இருக்கிறது.
டெல்லி ராம் லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே தனது அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள் யார்? யாரை எதிர்த்து இயக்கம் நடத்தினார்களோ அவர்களோடு சேர்ந்து கொண்டு அதே ராம் லீலா மைதானத்தில் நேற்று (திங்கள்கிழமை) பேரணி நடத்தி உள்ளனர். முன்பு அவர்கள் போராட்டம் நடத்தியபோது ஊழலற்ற அரசு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். தற்போது அவர்களிடம், மதுபான ஊழல் குறித்த அவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த கூட்டணியை சேர்ந்த 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் முக்கியத் தலைவர்கள் பேசியதன் விவரம் > மோடியின் ‘மேட்ச் பிக்ஸிங்’ – ராகுல் காந்தி விமர்சனம்