மலையாளத்தில் 200 கோடி வசூலைத்தாண்டி சாதனை படைத்த `மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. இதற்கிடையே சமீபத்தில் படத்தைப் பார்த்து ரசித்த ரஜினிகாந்த், படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குநரான சிதம்பரத்திடம் பேசினேன்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்க எதிர்பார்க்காத வாழ்த்து. ரஜினி சார் படம் பார்த்துட்டு பேசினாங்க. சென்னை வரும் போது ‘வாங்க சந்திப்போம்’னாங்க. நாங்க உடனே புறப்பட்டு வந்துட்டோம். திடீர்னு புறப்பட்டதால பாதி பேர்தான் வர முடிந்தது. சார் வீட்டுக்குள் நல்ல உபசரிப்பு. ‘யங்ஸ்டர்ஸ் டீமா இருக்கு’ன்னு ஆச்சரியமாகிட்டார். ‘இந்த சீனை எப்படிப் பண்ணீங்க? அதை எப்படிப் பண்ணீங்கன்னு எல்லாமே கேட்டாங்க. படப்பிடிப்பில் நடந்த விஷயங்களை அவர்கிட்ட சொன்னோம்.
எங்களுக்கு இன்னொரு ஆச்சர்யம். ரஜினி சார் எல்லா மொழிப் படங்களும் பார்க்கறார். சமீபத்தில் அவர் பார்த்த மலையாளப் படங்கள் பற்றியும் நிறைய விஷயங்கள் பகிர்ந்துகிட்டார். அங்குள்ள பிசினஸ் நிலவரங்களையும் சார் விரல் நுனியில் தெரிஞ்சு வச்சிருக்கார். அடுத்து எங்க படம் தெலுங்கிலும் வெளியாகுது. இந்தத் தகவலையும் சார்கிட்ட சொன்னேன். முகம் மலர்ந்து ‘வாழ்த்துகள்’ சொன்னார்.
அதைப் போல கமல் சார், சிம்பு சார்னு எல்லாருமே கூப்பிட்டுப் பாராட்டுறது சந்தோஷமா இருக்கு. இந்த வாரம் படம் தெலுங்கிலும் ரிலீஸாகறதால, இன்னிக்கு இரவு ஹைதராபாத் கிளம்புறோம். நாளைக்கு அங்கேதான் நிகழ்ச்சிகள் இருக்கு. அடுத்து இயக்கும் படம் பத்தி இன்னமும் முடிவு பண்ணல. ஆனா, சிம்பு சாருக்கு படம் பண்றேன், கமல் சாரோட ராஜ்கமல் நிறுவனத்திற்கு படம் பண்றேன்னு தகவல்கள் வர்றதை நானும் கேள்விப்பட்டேன். ஆனா, அப்படி எதுவுமில்லை. அடுத்து என்ன பண்றதுன்னு இன்னும் முடிவு பண்ணல” என்கிறார் சிதம்பரம்.