ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் அடிக்க, அதன் பிறகு விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், முன்னாள் கேப்டன் தோனி களத்தில் இறங்கி 16 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதனால், சென்னை அணி ரசிகர்கள் தோனியைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தோனி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெம்மிங் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். “தோனியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் ஒற்றை கையில் அடித்த சிக்ஸர் அற்புதமானது.
இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் மகேந்திர சிங் தோனியின் அதிரடி ஆட்டம் எங்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்களைக் கொடுத்தது. சென்னை அணியின் நெட் ரன் ரேட்டை (NRR) மனதில் வைத்து தோனி விளையாடினார்.
தோல்வியே அடைந்தாலும் குறைந்த ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடையக்கூடாது என்பது தோனிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அவர் தோல்வியை மனதில் ஏற்றிக்கொள்ளாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று ப்ளெம்மிங் கூறியிருக்கிறார்.