`பச்சோந்தியாக நிறம் மாறுவது நீங்கள்தான்..!' – டிடிவி, ஓபிஎஸ்-ஸைச் சாடிய ஆர்.பி.உதயகுமார்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரித்து பேசும்போது, “விஜய பிரபாகரன் முதன்முதலில் தேர்தலில் நிக்கிறார். அவர் தந்தையார் மக்களுக்காக உழைத்தவர். 2011-ல் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்து, அம்மா முதலமைச்சராகவும், கேப்டன் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழக மக்கள் தீர்ப்பளித்தனர்.

வந்திருந்த மக்கள்

எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தி.மு.க-வால் பெறமுடியவில்லை. அந்தக் கூட்டணி தொடர்ந்திருந்தால் தி.மு.க எங்கே என தேடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். தி.மு.க-வின் வாக்குறுதி தண்ணீரில் கோலம் போடுவதுபோல, அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி என்பது கோயிலில் கோலம் போடுவது போல நிலைத்து நிற்கும்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கள்ள உறவு வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே…” என்றதற்கு,

“இல்லாத மாயத்தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார், இது மக்களிடம் எடுபடாது. எடப்பாடியார் வெளிப்படையாக கூறிவிட்டார், எந்த முடிவு எடுத்தாலும் உறுதியாக உள்ளார். நல்ல உறவு, கள்ள உறவு எனச் சொன்னாலும் நாங்கள் வைத்திருக்கிற தெய்வீக உறவு தமிழ்நாட்டு மக்களோடுதான்.

ஆர்.பி.உதயகுமார்

தமிழ்நாட்டு மக்களுடன் அ.தி.மு.க கொண்டுள்ள தெய்வீக உறவு நிரந்தரமானது. அதில் இடைவெளி ஏற்படுத்தும் நோக்கில் இல்லாததை பொல்லாததை சொல்லி பார்க்கிறார் அது எடுபட மாட்டேங்குது.

முதலமைச்சர் நாகரிகமாகப் பேச வேண்டும். கூட்டணியை விட்டு வெளியே வந்து விட்டோம், 40 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். மக்கள் எங்கள்மீது வைத்திருக்கிற நம்பிக்கையை சிதைக்கிற வகையில் கூறுகிறார்” என்றார்

“டி.டி.வி.தினகரன் விமர்சித்து பேசியிருக்கிறாரே” எனக் கேட்டதற்கு, “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இங்கே வந்து என்னை தோற்கடிப்பதற்காக எல்லா வேலைகளும் பார்த்தார், நாயாக அலைந்து பார்த்தார் தோல்விதான் கிடைத்தது. கட்சிக்கு தலைவராக உள்ளவருக்கு நாவடக்கம் வேண்டும், அதிகார மமதை இன்னும் இறங்கவில்லை. செல்வாக்கை இழந்து நிற்பதற்கு நாவடக்கம் இல்லாததுதான் காரணம்.

எல்லோரையும் தூக்கி எரிந்து பேசும் அவர், மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத இனத்தைச் சேர்ந்தவர் . அவரைவிட என்னால் திறமையாக பேச முடியும். அரசியல் நாகரிகத்தோடு நாவடகத்தோடு பேசி பிரசாரத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்தால், அவருக்கு நல்லது. இல்லையென்றால் இருக்கிற செல்வாக்கையும் இழப்பார்.

நோட்டாவுக்குகீழ் வாக்குகள் பெறும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று கூறிய அந்த டி.டி.வி.தினகரன், இப்போது எங்கே இருக்கிறார், அந்த வீரமுள்ள தன்மானமுள்ள டி.டி.வி.தினகரனை தமிழ்நாட்டு மக்கள் தேடுகிறார்கள். எம்.பி பதிவிக்காக இரட்டை இலையை எதிர்த்து நின்று, பழி சுமத்தி தேர்தல் களத்தில் நிற்பதை இப்பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத்தான் கூறுகிறோம்.

ஆர்.பி.உதயகுமார்

டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்ஸும் ஏன் பிரிந்தார்கள்? நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவா? கொள்கை பிரச்னையா? பதவிக்காகப் பிரிந்தார்கள், இப்போது பதவிக்காக சேர்ந்துள்ளார்கள். பதவிக்காகப் பிரிவதும், தர்ம யுத்தங்களை நடத்துவதும்… பின்பு பதவிக்காக ஒன்று சேர்வதும் தொண்டர்களை ஏமாற்றுவதாகும்.

நான் அன்றைக்கும் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு கேட்டேன், இன்றைக்கும் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு கேட்பேன்  நாளைக்கும் இரட்டை இலைக்குத்தான் கேட்பேன், என் உயிர் போகும்வரை இரட்டை இலைக்குத்தான் ஓட்டு கேட்பேன்.

நேற்று ஒன்று, இன்று ஒன்று என பச்சோந்தியாக நிறம் மாறுவது நீங்கள்தான். இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள் எடப்பாடியார் தலைமையில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.