புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எங்கள் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, பாதம் தாங்கி என பேசும் உதயநிதி, தி.மு.க-வின் வரலாறு மற்றும் தாத்தா கருணாநிதியின் வெற்று வீரம் என்னவென்று தெரியாமல் பேசுகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரு.கருணாநிதியை வனவாசத்திற்கு அனுப்பியவர் புரட்சித் தலைவர். அவர் உடல் நலக்குறைவோடு இருந்த நேரத்தில் எனக்கு வாக்களித்தால் எம்.ஜி.ஆர் நலமாக வந்தவுடன் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன் என்றும், நானும் புரட்சித்தலைவரும் 40 ஆண்டுக்கால நண்பர்கள் என்றும் கூறி, புரட்சித்தலைவரின் பாதங்களைத் தாங்கியது யார்?
மறைந்த இந்திரா காந்தியை தடி மற்றும் கற்களால் ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் நடத்திய தி.மு.க, அதே இந்திரா காந்தியை நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என இந்திரா காந்தியின் பாதம் தாங்கியது இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. கடந்த மாதம் தங்களது அமைச்சர் கண்ணப்பனை புதுச்சேரிக்கு அனுப்பி, காங்கிரஸ்காரர்கள் மானங்கெட்டவர்கள், அரசியல் செய்யாமல் சீட்டுக்காக அறிவாலயத்தில் கதவை பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறார்கள் என பேசி காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்திய தி.மு.க, இன்று காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பது எதற்காக ?
தி.மு.க கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால் ரேஷன் கடைகளை திறப்பாராம். புதுச்சேரியில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறதா தேர்தல் முடிந்தவுடன் ரேஷன் கடைகள் திறப்பதற்கு? கடந்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் மூடப்பட்டது என்பது உதயநிதி அவர்களுக்கு தெரியுமா? 15 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் பா.ஜ.க-வுடனும், காங்கிரஸுடனும் கூட்டணி ஆட்சி நடத்திய தி.மு.க, ஏன் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரவில்லை ? மத்திய நிதிக்குழுவில் ஏன் இணைக்கவில்லை ?
புதுச்சேரி மாநிலம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. மத்தியில் தி.மு.க கூட்டணியில் இருந்த போது ஏன் மாநில கடனை தள்ளுபடி செய்யவில்லை. புதுச்சேரி மாநில விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக தி.மு.க அரசு நிலம் வழங்கவில்லை. நம்முடைய மாநிலத்திற்கு இந்த ஒரு சிறு உதவி கூட செய்யாத, இந்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு நாம் வாக்களிக்க கூடாது. கடந்த 5 ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம், மத்திய அரசிடம் வாதாடி எந்த ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்துள்ளாரா என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே நடைபெறும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் வேட்பாளர்களை மக்கள் புறந்தள்ளுவதுடன், அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்வேந்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.