இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரரான விராட் கோலி கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவார் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 1ம் தேதி தொடங்கும் இந்த ஐசிசி போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட போகிறது என்று ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட நிலையில் விராட் கோலி இடம் பெறுவது சந்தேகத்தில் இருந்தது. காரணம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும் என்பதால் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு செட் ஆகாது என்று கூறி, அவரை எடுக்க வேண்டாம் என்று சில பேச்சுக்கள் இருந்தது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் கோலி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மூன்று போட்டிகளில் 141.4 ஸ்ட்ரைக் ரேட்டில் 181 ரன்களுடன் ரன் தரவரிசையில் முன்னணியில் உள்ளார். முன்னர் டி20 போட்டிகளில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 138.16 ஆக இருந்தது. இதுவரை இந்த ஐபிஎல் போட்டியில் இரண்டு அரைசதங்கள் அடித்துள்ள நிலையில், மேலும் ரன்கள் குவிப்பார் என்று பிசிசிஐ முக்கிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோலி அதில் நிச்சயம் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
109 இன்னிங்ஸ்களில் 4037 ரன்கள் குவித்துள்ள கோலி டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி 50 (51.76) க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ” இப்போதுதான் ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி உள்ளது. விராட் கோலி நன்றாக விளையாடி வருகிறார். இனி வரும் போட்டிகளிலும் அவர் தனது ஸ்ட்ரைக் ரேட்டை மேம்படுத்துவார். எனக்கு தெரிந்தவரை அவர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவார். தேர்வாளர்கள் சமூக ஊடகங்களில் இருக்கும் கருத்துக்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். கிரிக்கெட் சமூக ஊடக தளங்களில் அல்ல மைதானத்தில் விளையாடப்படுகிறது,” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த டி20 உலக கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது. டி20 உலக கோப்பை அணியில் ஏற்கனவே சில வீரர்களின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக இருப்பார்கள், விராட் கோலி தனது வழக்கமான மூன்றாவது இடத்தை பிடிப்பார், அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் விளையாடுவார். மிடில் ஆர்டரைப் பொறுத்தவரை, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், ஷிவம் துபே, திலக் வர்மா என ஏகப்பட்ட பேர் உள்ளனர். மேலும் விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்ப பெரிய போட்டி உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களிலும் இதே நிலை தான் உள்ளது. ஐபிஎல் 2024 பெர்பாமன்ஸ் பொறுத்து முடிவு செய்யப்படும்.