புதுடெல்லி,
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ”பிரதமர் மோடி ‘மேட்ச்-பிக்சிங்’ செய்து தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார். தேர்தல் கமிஷனில் தனது ஆட்களை மத்திய அரசு நியமித்து விட்டது. எனவே, இந்த தேர்தல், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மேட்சாக உள்ளது” என்று கூறினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் பா.ஜனதா நேற்று புகார் அளித்தது. மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி, பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழு, ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தது.
பின்னர், ஹர்தீப்சிங் பூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு ஆட்சேபத்துக்குரியது. அக்கருத்துகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதுடன், கடுமையான பின்விளைவுகளை உண்டாக்கக்கூடியதாக உள்ளன.
எனவே, ராகுல்காந்தி, இதர காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமிஷனை வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அருண்குமார் கூறுகையில், ”ராகுல்காந்தி திரும்பத்திரும்ப இதுபோல் பேசி வருவதால், அவர் பேசாதவகையில் கண்டனம் தெரிவிப்பது பற்றி தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.