புதுடெல்லி: ‘‘பாஜக அரசுக்கு பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் எதையும் செய்யவில்லை. தேர்தல் பத்திரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கொண்டாடுபவர்கள், மனம் திரும்புவார்கள்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனியார் தமிழ் தொலைக்காட்சி சேனலுக்குப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் சிறப்பு பேட்டி அளித்திருந்தார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
தேர்தல் பத்திரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததற்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமைப்படுபவர்களும், அதை கொண்டாடுபவர்களும் விரைவில் மனம் திரும்புவார்கள். தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம் என்றுஉச்ச நீதிமன்றம் தடை செய்ததால், பாஜக அரசுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் எந்த செயலையும் செய்யவில்லை. என்ன செய்துவிட்டோம், அதை பின்னடைவாக கருதுவதற்கு?
தேர்தல் பத்திரங்கள் முறையை கொண்டு வந்ததால்தான் இன்று யார் நன்கொடை வழங்கியது, எந்தக் கட்சி நன்கொடை பெற்றது என்ற விவரங்கள் எல்லாம் தெரிகின்றன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு இதுபோன்ற வெளிப்படை தன்மை இருந்ததா? இப்போது அனைத்து விவரங்களையும் பார்க்க முடியும். எந்த அமைப்பும் முழுவதும் சரியானதாக இருக்க முடியாது. ஏதாவது குறைகள் இருந்தால், அவற்றை மேம்படுத்த முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.